பார்த்தீபப் பல்லாண்டு- நாள் 9

முகிழ் திறந்து மலர்களின்னும்
வெளியே வரவில்லை…
முகமலர்ந்த வெய்யோனை
வெளியே காணவில்லை…
அகங் கலங்க நின்றவர்தம்
விழிநிறைந்து நீரருவி ஆறாய்ச்
சொரிந்தோட சுகந்துறந்தபடி ஒருவன்
யுகங்களையும் கடந்து போகின்றான்…

விடம் நிறைந்து விடுதலைவழி
தடங்கரைந்துபோகா நிலைகருதி
இடம்,பொருள், ஏவலறிந்து
இயல்பாய் ஒரு புன்னகையுடன்
தடம் வரைந்து முன்னே போகத்
திடங்கொண்டான் திலீபனன்றோ!

சுடுங்குழல்கள் ஓய்வதாய்ச் சொல்லிச்
சுடர்ந்த பெரு விடுதலைத் தீயைப்
படர்ந்தெரியுமுன்னமே மாற்றான்
பணிந்திடச் செய்ய நினைந்திருந்தெம்
வீதிவழி தினம் தினம் நடந்தவேளை…

திடங்கொண்ட வழிகண்டு
திசையெலாம் திறம் காணும்
தியாகத் தடம்பற்றித் தனையீந்த
அறங்கொண்ட காவலனால்,
மடங்கொண்ட மாந்தரெலாம்
மண்ணுலகில் எழுந்து நின்று
இனங்கொண்ட வாழ்வுபெறக்
காலமெல்லாம் பல்லாண்டு கூறுதுமே…!

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments