அறந்தரும் சூரியனாய் நின்றகன்ற கதிர்பரப்பி
எம் மனங்களில் ஆளுகை புரிகிறான் வல்லாளன்…

சுதந்திரப் பறவைகள் அவனைச்
சுற்றிவந்து சிறகடித்தன… , அவன்
உரைத்தபடி வானில் நின்ற தன்
தோழர்களுடன் அளவளாவத் தொடங்கிவிட்டான்…
அவனை நினைந்துருகிச் சொரிகின்ற
கண்ணீர் மழையில் நனைந்திருந்தது
எம் தேச நிலம்…

“ஓ மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா, உன் பாதணிகளை எனக்குத்தா உன் ஆயுதங்களை எனக்குத்தா…..”

அவன் இதயக் கூட்டை ஆழமாய் வசியம் செய்த வீரவரிகள் அவை, அந்த இறுதிக் கணப் பொழுதுகளிலும் இப்பாடல் வரிகள் நிச்சயமாய் அவன் காதுகள் தழுவி இதயம் தொட்டு ரீங்காரமிட்டிருக்கும்,

அவன் ஒளிமுகம் காட்டும்
முகத்திருந்த கண்ணாடி,
துரிதமாய் அவன்போல்
ஓடியபடி கைகளில் ஒட்டியிருந்த
கைக்கடிகாரம்,
அவன் நடந்த வரைக்கும் தேசமளந்த
அவன் கால்கள் தாங்கிய பாதணிகள்,
அரசியல் ஞானிபோல் அவன்
சட்டைப் பைக்குள் நிமிர்ந்திருந்த
குமுழ்முனைப் பேனா,
அவனோடிருந்த அத்தனையும்
தேடுதிங்கே தமிழீழம்!

கண்ணிருந்தும் முகத்திரண்டு
புண்ணுடையர் போல எம்
மண்ணை வீழ்த்திட வந்தவர்தம் எண்ணம்
பொய்த்திடத் தன்னைக் கொடை தந்தெம்
எண்ணமெல்லாம் உயர்ந்தவன்
வண்ணப் பெயர்பாடிப் பல்லாண்டு கூறுதுமே

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments