இந்திய-இலங்கை உடன்படிக்கை கையெழுத்தாகி அதனைத்தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையில் அடியெடுத்து வைத்தபொழுது எம்மக்கள் ஆராத்தியெடுத்து,திலகமிட்டு,மாலைசூட்டி,ஆரவாரத்துடனும்,அளவில்லாத மகிழ்ச்சியுடனும் அவர்களை வரவேற்றார்கள்.

சிங்களப் பேரினவாதத்தின் பிடியிலிருந்து தங்களைக் காக்கவந்திருக்கும் இரட்சகர்களாக இந்திய அமைதிப்படையை எம்மக்கள் கருதினார்கள். இந்தியாமீதும்,இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி மீதும் எம்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும்,மரியாதையும் இமயம்போல் உயர்ந்து நின்றது.ஆனால் ஒன்றரைமாத காலமாவதற்குள் அந்த நம்பிக்கையும்,மரியாதையும் அதளபாதாளத்திற்குச் சரிந்துவிட்டது.

எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலத்திலேயே ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கை உடைந்து நொருங்கத் தொடங்கிவிட்டது. தியாகதீபம் திலீபன் அவர்களின் போராட்டம் உண்மையில் இந்தியாவுக்கு எதிரான போராட்டம் அல்ல. ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கையை எமது இயக்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.எனினும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நிலையெடுக்கவும் எமது இயக்கம் விரும்பவில்லை.

இந்த உடன்படிக்கை எமது தலைமைக்கு திருப்தியளிக்கவில்லையென்பதுதான் உண்மையான நிலையாகும்.இந்த உடன்படிக்கையை ஏற்காவிடினும் அதனை நிறைவேற்ற இந்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ஒப்புக்கொண்டு அதன்படி ஆயுதங்களை இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்தது எமது இயக்கம்.தமிழீழ மக்களின் பாதுகாப்பை இனி இந்தியா பார்த்துக்கொள்ளும் எனும் நம்பிக்கையோடு ஆயுத ஒப்படைப்பு நடைபெற்றது.

ஆனால் இந்த அரைகுறை உடன்படிக்கையைக்கூட ஜெயவர்த்தனா தலைமையிலான சிங்கள அரசு முழுமையாகச் செயற்படுத்தவில்லை. 1-அவசரகால சட்டம் நீக்கப்படவில்லை 2-தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை 3-அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தடுக்கப்படவில்லை. 4-சிங்கள ஊர்காவல்படையியிடமிருந்து ஆயுதங்கள் மீளப்பெறவில்லை. 5-சொந்த இடங்களில் தமிழர்கள் குடியேற்றப்பட இராணுவம் அனுமதிக்காது விரட்டியது. 6-இடைக்கால அரசு அமைவதற்குமுன் தமிழர் பகுதிகளில் சிங்களக் காவல் நிலையங்களைத் திறக்க முயற்சிகள் நடைபெற்றது. 7-சமூகவிரோத இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு இந்திய அதிகாரிகள் ஊக்கமளித்தனர். 8-தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள இராணுவப்படை முகாம்கள் அகற்றப்படவில்லை. 9-இந்திய வானொலியும்,தொலைக்காட்சியும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டது.

இவற்றின் விளைவாக எமது இயக்கத்திற்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. தியாகதீபம் திலீபன் அவர்களின் உண்ணாவிரதம் திடீரென்று ஏற்பட்ட நிகழ்ச்சி அல்ல. ஒன்றரைமாத காலமாக தமிழீழ மக்களிடம் இந்த உடன்படிக்கை குறித்து நம்பிக்கை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எம்மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையிலும்,ஆத்திரமூட்டும் வகையிலும் இந்திய அதிகாரிகளின் போக்கு அமைந்துவிட்டது. உடன்படிக்கையை ஏற்கும்படி தமிழர் தரப்பை வலியுறுத்தும் இந்திய அதிகாரிகள் இந்த உடன்படிக்கையின் பல அம்சங்களை சிங்களம் மீறியபோது அதைக்கண்டும் காணாதவர்கள்போல் இருந்தார்கள்.

சிங்கள இராணுவ உதவியுடன் திருகோணமலையிலும்,மட்டக்களப்பிலும் பல்லாயிரக்கணக்கான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டபொழுது அதைத் தடுக்க இந்திய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைதி திரும்பிவிட்டதென நம்பித் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பமுயன்ற எம்மக்களை சிங்கள இராணுவம் விரட்டியடித்தபோது அதை ஏன் என்று கேட்க இந்திய அதிகாரிகள் முன்வரவில்லை. தமிழ் அரசியல் கைதிகளை முழுமையாக விடுவிக்க ஜெயவர்த்தனா மறுத்தபொழுது அதிலும் இந்திய அதிகாரிகள் தலையிடவில்லை.

மாறாக எமது இயக்கத்திடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதிலும்,சமூக விரோத இயக்கங்களை வளர்த்துவிடுவதிலும் இந்திய அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினார்கள். தாங்கள் சொன்னபடி கேட்கும் இயக்கங்களின் பிரதிநிதிகளைக்கொண்ட ஒரு பொம்மை இடைக்கால அரசை அமைத்துக்கொண்டு தமிழீழத்தை ஆள்வதையே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்‌ஷித் விரும்பினார். அவருடைய இந்த ஆணவப்போக்கு நிலைமையை மேலும் சீர்கேடடைய வைத்தது.

உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள ஐந்து அம்சங்களையும் உடனடியாக நிறைவேற்றவேண்டுமென்று வற்புறுத்தியே திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்தார். இந்தக் குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜெயவர்த்தனாவை டிக்சிற் வலியுறுத்தவில்லை.அக்கறைகாட்டவுமில்லை. 1987 செப்டம்பர் 15ஆம் நாளன்று திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் தொடங்கினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிலைமையை விளக்கி எமது தேசியத் தலைவர் அவர்கள் டிக்‌ஷிற்றிக்கு கடிதம் எழுதினார்.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments