இற்றைக்கு 38 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு கடலில் வைத்து கடற்புறாவில் பயணித்த 17 வேங்கைகள் இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பலாலியில் தடுத்து வைத்து பின்னர் கொழும்பு கொண்டு செல்ல முற்பட்ட வேளையில், தம் கொள்கையின் வழி நின்று ஒக்டோபர் மாதம் 5ம் நாள் சயனைட் அருந்தி வீரச்சாவினை தழுவிக்கொண்ட 12 வேங்கைகளான குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், ரெஜினோல்ட், பழனி, கரன், தவக்குமார் ஆகியோரினதும் 25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த எமது விடுதலைப்போராட்டத்தின் தொழில்நுட்பத் தந்தையும் தளபதியுமான கேணல் ராயூ/குயிலன் அவர்களதும் புலம் பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் துப்பாக்கி சுட்டுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் அவர்களதும் வணக்க நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றிருந்தது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அகவணக்கத்துடன் சுடர்வணக்கம்,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் காணிக்கையாக்கப்பட்டன.
இவ்வெழுச்சி நிகழ்வில், பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் நிகழ்வுகளாக வணக்கப்பாடல்கள், கவிவணக்கம், நினைவுரை, எழுச்சி நடனம் போன்றன இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவராலும் பாடப்பட்டதோடு தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலினைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு






