தமிழீழத்தின் தலைசிறந்த வீரர்களின் வரலாறு இளம் சந்ததிக்குக் கடத்தப்படவேண்டும் என்ற அவசியம் பலருக்குப் புரிவதில்லை. உலகிலேயே ஒரு வீரன் தனது 25 வயதிற்குள் 70 களங்களில் சமர்செய்திருக்கிறான் என்பதுவும், இது தமிழீழப் போரியல் வரலாற்றில் மட்டுயல்ல, உலக இராணுவ வரலாறிலேயே ஓர் பெருஞ்சாதனை என்பதும் பலர் அறிந்திராத விடயம்.

மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து, மண்டைதீவு கடற்படைத் தளத்தினுள் இறங்கி வேவுபார்த்து, 15 பேர் கொண்ட குழுவோடு எதிரிக்கு நடுவில் இறங்கி, திடீர்த்தாக்குதல் நடாத்தி படைகளை நிலைகுலையச் செய்து, முதன்மைத் தாக்குதல் அணிகளை உள்ளெடுக்கப் பாதை அமைத்து வெற்றிக்கு வழிசமைத்தபோது அவருக்கு வயது 20 மட்டும்தான்.

யாழ்ப்பாணத்திலிருந்து தவிபு வெளியேறி, வன்னிக்குள் இருந்தபடி ஓர் பாரிய வெற்றிக்காக உழைத்துக்கொண்டிருந்த தருணத்தில், முல்லைத்தீவுத் தளத்தின் மூன்றிலொரு பங்கிற்கான வேவு வேலை அவரிடம் பிரித்துக்கொடுக்கப் படுகிறது. சரியாக வேவுபார்த்து, அணிகளை உள்ளிறக்க வழிசமைக்கவேண்டும். முல்லைத்தீவுத் தளம் பெருங்கடலோடு இணைந்திருந்ததனால் நெடுந்தொலைவு நீந்திச்சென்று உள்நுழைய வேண்டும். நடவடிக்கை சிறிது பிசகினாலும் ஒட்டுமொத்த அணியும் அடிவாங்கி அழியும். ஆனால் அவர் அதனைத் தனித்துச் செய்து முல்லைத்தீவு வெற்றிக்குப் பெரும்பலமானார்.

தனது படையணியின் போராளி கண்ணிவெடியொன்றில் சிக்கிக் காலிழந்து போனதைத் தன் தவறென்றும், இனி இவ்வாறு ஓர் விடயம் நடக்காதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதிவைத்தபோது அவருக்கு 23 வயது.

Water shed இராணுவ நடவடிக்கையில் பெண்போராளிகளின் உயிரிழப்பு அதிகமாகிப்போய்விட, அந்த வெஞ்சினத்தை ஓயாத அலைகள் – 3 இன்போது அதே இடத்தில் தன்படைகளை வழிநடத்தி எதிரிகளை அடித்துத் துவைத்துத் தீர்த்துக்கொண்ட வெஞ்சினப் புலி அவர்.

30,000 படைகளுக்கு நடுவில் குடாரப்பில் தரையிறங்கிய அணிகள், இத்தாவிலில் போரிட்டுக்கொண்டிருக்க, விடியும் வேளையில் எமது அணிகள் தொடர்புகளை இழந்தன. எதிரி மீளவும் கைவிட்ட இடங்களைப் பிடித்துக்கொண்டான். மறுநாள் விடிவதற்குள் ஏதாவது செய்தாகவேண்டும். அணித்தலைவர்களை ஓரிடத்திற்கு அழைத்த தளபதி தீபன் சொன்ன விடயங்களில் உள்ள தீவிரம் எல்லோருக்கும் புரிந்து நடவடிக்கைக்கு அணிசெய்ய அங்கே அவர் தேவைப்பட்டார். “இது 1000 போராளிகளின்ர உயிர்ப்பிரச்சனை, நாங்கள் உயிரோட இருந்துகொண்டு ஆனையிறவை வீழ்த்தாமல் அவர்களது அழிவிற்குக் காரணம் சொல்லிக்கொண்டிருக்கேலாது ” என தீபன் அண்ணை சினப்பட, இரவிரவாய் வேவு பார்த்த அவர் அடுத்த 48 மணிநேரத்திற்குள் அந்தத் தளத்தை வெற்றிகொள்ள தலைவரின் வியூகம் முழுமை பெற்றது.

1998 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் – 2 வெற்றிக்களிப்பிலிருந்த அவரை; சாள்ஸ் அன்ரனி படையணியி சிறப்புத் தளபதி என்ற பொறுப்பிலிருந்து விடுவித்தார் தலைவர் . எதிரியின் படைத்தளத்தில் எடுக்கப்பட்ட பொருட்களை, அனுமதி பெறாமல் தனது படையணிக்காக உபயோகித்ததற்காக தண்டனை அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. பெரும் படையணியொன்றின் சிறப்புத் தளபதி யாக இருந்துகொண்டு, தலைவரால் தண்டிக்கப்படும் அளவிற்குத் தவறுசெய்துவிட்டேனே என மனம் கலங்கி வாடிப்போனார் அவர். இதுவே வேறு படையென்றால் நான் இப்போதே விலகுகிறேன் என துண்டுகொடுத்துவிட்டுப் போயிருப்பார்கள். ஆனால் தலைவரின் வளர்ப்பில் வாழ்ந்தவர்கள் அப்படியல்ல.

மீண்டும் 2000 ஆம் ஆண்டு தலைவரால் சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார்.

ஓயாத அலைகள் – 4 தாக்குதலுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தளபதி தீபனிடம் வந்த அவர், மீளவும் ஒருக்கா வடிவாப் பாத்திட்டு வாறன் எனப் போனவர்தான். வெடிகள் துளைத்த உடலமாக மீட்கப்பட்டு 4 நாட்கள் உயிருக்குப் போராடி 23.10.2000 அன்று வீரச்சாவடைந்தார்.

“தமிழீழம் கிடைச்சபிறகு, என்னோட நிண்டு சண்டை பிடிச்ச எல்லாப் பெடியளின்ரையும் பெற்றோரடயும் போயிருந்து ஆசைதீரக் கதைக்க வேண்டும்” என்று தனது நாட்குறிப்பில் எழுதிவைத்த அந்தக் குழந்தைத் தளபதியை, அவர் அணியிலிருந்த போராளிகள், அவரது பெயருடன் “அப்பா” என்பதைச் சேர்த்தே அழைப்பார்கள். ஆனால் அவருக்கு அப்போது வயது வெறும் 25 மட்டும்தான்..!

அவர்தான் தமிழீழத்தின் மாபெரும் சண்டைக்காரன், எம்மினக் காவலன் லெப்.கேணல் சேகர் (மாயாண்டி ஜெயக்குமார்)

எத்தனை வரலாறுகள், எத்தனை வீரக்கதைகள், அந்த மரபணுத் தொடர் இன்னும் எம்முள் இருக்கிறதா ? எத்தனை சாதனைகள், எத்தனை ஈகங்கள்,..
இவையெல்லாவற்றையும் எப்படி அடுத்த சந்ததிக்குக் கற்பிக்கப்போகிறோம் ? யார் இதைச் செய்யப்போகிறார்கள் ? உன் பெரியப்பனும், மாமனும் வீராதி வீரர்கள் என்று இனிவரும் குழந்தைகளுக்கு இதையெல்லாம் பாடமாகச் சொல்லித்தர ஓர் வழிபிறக்குமா ?

ஏக்கங்களுடன்;
உலகத்தமிழர் உரிமைக்குரல்.

வீரவணக்கம் பெருவீரனே..!

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments