1980களின் இறுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றியிருந்த மேஜர் காந்தரூபன் என்பவர் தொடர்பான நெகிழ்ச்சியான கதையொன்று தற்போது பகிரப்பட்டு வருகிறது.
காந்தரூபன் என்ற இளைஞர், தாய் தந்தையரை இழந்த நிலையில் யோகராஜா தம்பதியினரின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார்.
தாயகம் எதிர்கொண்ட வலி அனைத்தும் அவரை தீவிரமாகப் பாதித்ததன் காரணமாக இளம் வயதிலேயே போராட்டத்தில் ஈடுபட அவர் ஈர்க்கப்பட்டார்.
ஒரு மோதலின் போது, எதிரி படையினருடன் நேரிட்ட போரில் காயமடைந்த காந்தரூபன், இயக்கத்தின் மரபுப்படி உயிரை மாய்க்க முயன்றபோதும், அருகில் இருந்த தோழர்கள் அவரை மீட்டு காப்பாற்றினர்.
உயிர் தப்பினாலும், அருந்திய விஷத்தால் அவரது உடல் மிகுந்த தளர்ச்சி அடைந்தது.
வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைப்படி, அவருக்கு சத்துணவு தேவைப்பட்டதால், அதை புரிந்துக் கொண்ட தேசியத் தலைவர், பசு மாடு ஒன்றை வாங்கி அவருக்கான தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
அதன்போது, தலைவரின் துணைவியாரே காந்தரூபனை நேரடியாக கவனித்த நிலையில், சில வாரங்களில் அவர் மீண்டு மீண்டும் பணியில் இணைந்தார்.
எவ்வாறாயினும், காந்தரூபனுக்கு தனது உடல் மீண்டிருந்தாலும், மனதில் ஒரு புதுக் கனவு உருவாகி இருந்தது.
ஒருநாள் தலைவரை நெருங்கிப் பேச கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அவர், “தமிழீழத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் என்று எவரும் இருக்கக் கூடாது; அவர்களை நமது இயக்கம் அரவணைக்க வேண்டும்” என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அந்த எண்ணம் பின்னர் ஒரு உண்மையான முயற்சியாக மாறியது. 1993 நவம்பர் 1ஆம் திகதி மேஜர் காந்தரூபனின் விருப்பத்தின் படி, காந்தரூபன் அறிவுச்சோலைச் சிறுவர் இல்லம்’ திறக்கப்பட்டது.
அந்த இல்லம், வடமராட்சி முதல் கிழக்குக் கடற்கரை வரை பெற்றோரை இழந்த பல பிள்ளைகளுக்கான புதிய இல்லமாக மாறியது.
இன்று, அந்த இல்லத்தில் வளர்ந்த குழந்தைகள் பலரும் கல்வியாளர்களாகவும், சமூகப் பணியாளர்களாகவும், தாயக முன்னேற்றத்தில் பங்காற்றுபவர்களாகவும் விளங்குகிறார்கள்.
அந்தவகையில், 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த இல்லம் இவ்வருடத்துடன் தனது 32 ஆம் வருட நினைவு நாளை எட்டியுள்ளது.
