ரஷ்யாவில் மருத்துவ கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் சிங் சவுத்ரி, 2023ஆம் ஆண்டு ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
கடந்த மாதம் 19ஆம் திகதி காலை 11 மணியளவில் பால் வாங்கச் செல்கிறேன் என கூறி விடுதியை விட்டு வெளியேறிய அஜித், பின்னர் திரும்பி வரவில்லை.
நதியில் மிதந்த சடலம்
இதையடுத்து, நண்பர்கள் மற்றும் இந்நாட்டு காவல்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் வொயிட் நதியின் அணை பகுதியில் இருந்து அஜித்தின் உடல் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது நண்பர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்திய தூதரகம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றும் வெளியிடாத நிலையில், அஜித்தின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதிர்ச்சியில் குடும்பத்தினர்
குடும்பத்தினர் நிலத்தை விற்று அஜித்தை ரஷ்யாவிற்கு படிக்க அனுப்பியிருந்த நிலையில், அவரது மரணம் அவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அவர்கள் உடலை விரைவாக இந்தியா கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, அஜித்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு, மாணவரின் உடலை சொந்த நாட்டுக்கு கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
