வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அதனை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (K. Kodeeswaran) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய (13.11.2025) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “கார்த்திகை மாதத்தில் வடகிழக்கிலே மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் 32 க்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள் உள்ளன.
எங்களது இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்கள், பொதுமக்கள் இறந்த அந்த தூய்மையான இடங்களை பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அந்த துயிலுமில்லங்களில் இருந்து இராணுவப் பிரசன்னத்தை நகர்த்தி தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும். இதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்க தேவையில்லை. நாங்கள் தமிழர்கள் அந்த இடங்களுக்கான நிதியை ஒதுக்கி புனிதமாக பாதுகாப்போம்” என கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
