மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாசாரம் ஒன்று உருவாகும் என நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

76 வருடகாலமாக இந்த நாட்டில் இது தான் நடந்தேறியிருக்கின்றது எனவும் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (18.11.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டனம்

மேலும் குறித்த அறிக்கையில், “திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப் பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது.

அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி சிறிலங்கா காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்படுகின்றது.

இதன்பிறகு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர் சிலையின் பாதுகாப்பு காரணமாக தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தால் புத்தபிக்குகள் மற்றும் காவல்துறையுடன் இணைந்து அதே புத்தர் சிலை நிறுவப்படுகின்றது.

மாற்றம் என்று சொல்லி இனவாதமற்ற புதிய அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவாகும் என்று நம்பி வாக்கு செலுத்திய தமிழ் மக்கள் இன்று முழுவதுமாக அரசினால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த செயல் எந்த அரசு அதிகாரத்திற்கு வந்தாலும் சிங்கள பேரினவாதப்போக்கு மாறாது என்பதையே உணர்த்துகின்றது.

புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதி அகற்றப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவது தொடர்ச்சியாக சிங்கள மக்களிடத்தில் தமிழர்களை தீயவர்களாக சித்தரிப்பதைத் தான் எடுத்துக்காட்டுகிறது. புத்தர் சிலையை வைத்தது யார்? அமைதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழும் தமிழ் மக்களை குழப்பியது யார் ? புத்தர் சிலையை அகற்ற வந்த காவல்துறையினரின் கன்னத்தில் அறைந்தது யார்? இவர்களுக்கு எதிராக எல்லாம் இந்த நாட்டில் சட்டம் செயற்படாதா? என கேள்வியெழுப்பப்பட்டது.

மேலும், நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களுக்கான சேவையை ஆற்றுவதைக்காட்டிலும் புத்த பிக்குகளின் பேச்சை வேதவாக்காக கேட்டு நடப்பதையே இனப்பிரச்சினை தொடங்கிய காலகட்டத்திலிருந்து அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments