திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவொன்று உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ மேலும் கூறியதாவது:- “திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்குச் சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித பூமிக்கான உரித்து கிடைத்துள்ளது.

விசேட குழு 

ஏதோவோரு பிரச்சினை உருவாகின்றது. அந்தப் பிரச்சினையில் புத்தர் சிலையைக் கொண்டு செல்லும் தரப்பாகப் பொலிஸார் மாற்றப்பட்டுள்ளனர். புத்தர் சிலையை அகற்றுவதற்குப் பொலிஸாருக்கு உள்ள உரிமை என்ன? தவறைப் புரிந்துகொண்டு மீண்டும் அந்தப் புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்துள்ளனர். பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமை தொடர்பில் நாம் அனைவரும் அறிவோம்.

புத்தர் சிலை விவகாரத்துக்குத் தீர்வு.. சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை | Trincomalee Buddha Statue Issue Sajith

அதேபோன்று மற்றைய மதங்களுக்கு வழங்கப்படும் உரிய கௌரவம் மற்றும் இடம் என்பன வழங்கப்பட வேண்டும். எனவே, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவொன்றை அமைக்க வேண்டும்.

ஜனாதிபதி அதனைச் செயற்படுத்த வேண்டும். இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் போது இதனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துப் பலனில்லை. நாட்டுத் தலைவர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

இது சாதாரண பிரச்சினையல்ல என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஏனைய மதங்களில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போதும் நாங்கள் இவ்வாறு செயற்பட்டோம். சிறந்த பௌத்தர்கள் போன்றே நடந்து கொண்டோம்.

ஆனால், தற்போது சில குழுக்கள் பௌத்த மதத்தைத் திரிபுப்படுத்துகின்றன. இந்தநிலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு நான் ஜனாதிபதிக்குக் கூறுகின்றேன். ஜனாதிபதி தீயை உருவாக்கக் கூடாது.

ஜனாதிபதியிடம் கோரிக்கை 

தீயை அணைப்பதற்கே நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புப் பிரிவினர் இதுபோன்ற விடயங்களில் தலையிடாது. நாட்டின் ஜனாதிபதி இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிச் செல்லாத வகையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தர் சிலை விவகாரத்துக்குத் தீர்வு.. சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை | Trincomalee Buddha Statue Issue Sajith

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகாநாயக்க தேரர் மற்றும் இந்தப் பிரச்சினையில் தொடர்புபட்டுள்ள சகல குழுக்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுங்கள். பிரச்சினையில் இருந்து நழுவிச் செல்வது தலைமைத்துவம் அல்ல.

இதனைத் தீர்க்க வேண்டும். நாட்டில் பல இடங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றுக்கு முறையான தீர்ப்புகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை, உண்மையான மக்கள் இறையாண்மை, நாட்டின் சுதந்திரத்தைப் பலப்படுத்தும் சாதகமான செயற்பாடுகளுக்கு எதிர்க்கட்சி கூட ஒத்துழைப்பை வழங்கத் தயார்.

ஆனால், விகாரைகளுக்குள் சென்று செயற்படுவதற்குப் பொலிஸாருக்கு உரிமை கிடையாது. இதனால் இந்தப் பிரச்சினையில் ஜனாதிபதி உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments