மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தந்தையான 23 வயதுடைய எம்.மசூத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துச் சம்பவம்

இவர் மீராவோடை பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராவார்.

கோர விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் பரிதாப மரணம் | Eastern Universitystudent Tragically Dies Accident

மேற்படி மாணவன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள மருத்துவபீடத்தில் இருந்து ஓட்டமாவடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த உழவு இயந்திரம் திடீரென வலது புறத்து உள்வீதிக்கு மாறிய வேளை அதனுடன் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

இதன்போது உழவு இயந்திரத்துக்கும் இழுவைப் பெட்டிக்கும் இடையில் மோட்டார் சைக்கிள் சிக்கியுள்ளது.

மேற்படி மாணவன் அணிந்திருந்த தலைக்கவசம் சுக்குநூறாகியதையடுத்து தலையில் பாரிய காயம் ஏற்பட்டு இரத்தப் பெருக்கினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரினால் கைது

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.உழவு இயந்திரத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோர விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் பரிதாப மரணம் | Eastern Universitystudent Tragically Dies Accident

உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பின்னர் விசாரணையை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments