மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக் குற்றச் முகாம்களில் மனிதக் கடத்தலுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில், பேங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியன இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன

சட்டவிரோதக் கும்பல்

தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் விஜயந்தி எதிரிசிங்க மற்றும் தூதரக அதிகாரிகள், தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு, சமூக மேம்பாட்டு அமைச்சு, தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் தீவிரமாகச் செயற்பட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் தாய்லாந்து எல்லை வழியாக பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இலங்கைத் தூதரகம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு மற்றும் தாய்லாந்தின் மே சோட் பகுதியில் உள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய விமானப் பயண வசதிகள் மற்றும் ஏனைய தளபாட ரீதியான உதவிகளையும் தூதரகம் பாராட்டியுள்ளது.

வேலைவாய்ப்பு என நம்பி சுற்றுலா விசா மூலம் மியன்மார் போன்ற நாடுகளுக்குச் சென்று, இவ்வாறான சட்டவிரோதக் கும்பல்களிடம் சிக்கிக்கொள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகப் பொதுமக்களை எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments