யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதி காயத்திரி அகிலன் வீட்டில் கைது செய்யப்பட்ட ஐவரும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் தை மாதம் 26 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுள் வேலன் சுவாமிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும், இருவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்கள் த.பிரதீபன்
மூன்றாம் இணைப்பு
யாழ். தையிட்டி போராட்டக்களத்தில் இருந்து கைது செய்யப்பட்ட ஐவரையும் மீட்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்ட குழுவினர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
பலாலி காவல் நிலையத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள வேலன் சுவாமிகள், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஐவரையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தையிட்டி – திஸ்ஸ விகாரைக்கு முன்பாக முகாமிட்டிருக்கும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அகன்று செல்வார்களாயின் இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, போராட்டக்களத்தில் இருந்து சிலர் வெளியேறிச் சென்றுள்ளதாகவும், எனினும், கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த பின்னரே விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
இதன்போது, வேலன் சுவாமிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர், மற்றும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட ஐவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டக்களத்தில் காவல்துறையிருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், காவல்துறையினரால் கீழே தள்ளி விழுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும்வரை அகன்று செல்லமாட்டோம் என சிவஞானம் சிறீதரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டும் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெற்று உள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான காவல்துறையினர், கலகம் அடக்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் த.பிரதீபன்
