அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், பல மாதங்களாக மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒன்று என்பது புதிய நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
15 பேர் கொல்லப்பட்ட இந்தசம்பவத்தின் போது, துப்பாக்கிச் சூட்டைத் தொடங்குவதற்கு முன்னதாக துப்பாக்கிதாரிகள் மக்கள் கூட்டத்தை நோக்கி வெடிபொருட்களை வீசியுள்ள போதிலும், அதிர்ஷ்டவசமாக அவை வெடிக்கவில்லை.
சிசிடிவி காட்சிகள்
தாக்குதலில் ஈடுபட்ட சஜித் அக்ரம் மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் ஆகியோர், ISIS பயங்கரவாத அமைப்பின் கொடிக்கு முன்னால் அமர்ந்து தாக்குதலுக்கான காரணங்களை விளக்கி காணொளி பதிவு செய்துள்ளதோடு, தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாகவே நியூ சவுத் வேல்ஸின் கிராமப்புறப் பகுதிகளில் போர் தந்திர முறையிலான துப்பாக்கிப் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே போண்டாய் கடற்கரைக்குச் சென்று அவர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தமை சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னர் தந்தை சஜித் அக்ரம் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 24 வயதான நவீத் அக்ரம் கைது செய்யப்பட்டு அவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பைக் கருதி இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தத் தகவல்கள், இன்று(2025.12.22) நீதிமன்ற உத்தரவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
