அந்த இனம் தனது உரிமைகளை விடத் தனது நுகர்வுச் சுகபோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போதே அதன் வீழ்ச்சி தொடங்குகிறது.
இன்று யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் அரங்கேறிய இரண்டு நிகழ்வுகள், ஈழத்தமிழினத்தின் தற்போதைய கூட்டு மனசாட்சி குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
ஒருபுறம், தையிட்டி பகுதியில் இராணுவத்தின் துணையோடு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பிற்கும், விகாரை அமைப்பிற்கும் எதிராக ஒரு சிறு குழுவினர் வெயிலிலும் மழையிலும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபுறம், ‘No Limit’ என்ற ஆடை நிறுவனத்தின் திறப்பு விழாவைக் காண்பதற்காகவும், அங்கு கிடைக்கும் சலுகைகளுக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்துக் கொண்டு திரண்டு நிற்கிறார்கள்.
போராட்டக் களத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கையை விட, கடை வாசலில் நின்றவர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் என்பதுதான் கசப்பான உண்மை. இந்தத் தரவுகள் சொல்லும் செய்தி என்ன?
 “எனது மண் பறிபோனால் எனக்குக் கவலை இல்லை, ஆனால் எனது பொழுதுபோக்கிற்கும் அலங்காரத்திற்கும் குறைவிருக்கக் கூடாது” என்ற சுயநலமான மனநிலைக்கு யாழ் சமூகம் தள்ளப்பட்டுவிட்டதா?
இன்று தையிட்டியில் நடப்பது வெறும் விகாரை கட்டுமானமல்ல; அது திட்டமிட்ட சிங்களமயமாக்கலின் ஒரு நீட்சி என்பதை ஏன் யாழ்மக்கள் புரிந்து கொள்ள மாட்டேன் என்கின்றனர்?
கத்தியின்றி ரத்தமின்றி ஒரு இனத்தை அதன் நிலத்திலிருந்து வேரறுக்க முடியும் என்பதைப் பேரினவாதம் நன்கே அறிந்து வைத்துள்ளது.
இன்று தையிட்டி, நாளை உங்கள் வீட்டுக்காணி என நில ஆக்கிரமிப்பு விரிவடையும் போது, நாம் குரல் கொடுக்கத் துணிவில்லாமல் இருந்தால், நமது அடுத்த சந்ததி பாலஸ்தீனியர்களைப் போல சொந்த மண்ணிலேயே நாதியற்ற அகதிகளாக அலைய வேண்டிய நிலை ஏற்படும்.
“உரிமைக்காகப் போராடாத ஒரு இனம், அடிமையாக வாழ்வதற்கும் தகுதியற்றது.”
உழைக்கும் பணத்தைச் செலவிடவும், புதிய கடைகளுக்குச் செல்லவும் எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அந்த ஆர்வம் எமது இனத்தின் இருப்பைத் தீர்மானிக்கும் போராட்டங்களில் ஏன் இல்லை என்பதே இங்குள்ள கேள்வி.
போராட்ட உணர்வு மழுங்கிப்போவதும், சமூகப் பொறுப்பின்றித் தனிநபர் சுகபோகங்களில் மூழ்கிப்போவதும் ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம் அல்ல.
அன்பார்ந்த யாழ் வாழ் மக்களே!
உடுப்புக்கடைகளும், உணவகங்களும் நாளை அமையலாம். ஆனால், பறிபோகும் ஒரு அங்குல நிலத்தைக் கூட எம்மால் மீண்டும் பெற முடியாது. நிலம் என்பது எமது அடையாளம், எமது அரசியல் பலம். அந்த நிலமே பறிபோகும் போது, நீங்கள் வாங்கும் ஆடம்பர உடைகள் உங்களை எப்படிக் கௌரவப்படுத்தும்?

பிளவுபட்டு நிற்கும் மக்கள் கூட்டம்
அந்தவகையில் இன்றும் தையிட்டியில் மக்கள் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பெருமளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பலக்லை மாணவர்களும் போராட்டட் களத்தில் இருக்கின்றனர். அதேசமயம் யாழ்ப்பாணத்தில் Nolimit திறப்பு விழா இன்று பெருமெடுப்பில் இடம்பெறுகின்ற நிலையில் தனை காண மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
