இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழர்களுக்கு கரிநாள் என தெரிவித்து கிளிநொச்சி நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“விடுதலைக்காக போராடுவது எங்கள் உரிமை இன்று 2026 பிப்ரவரி 4ம் திகதி தமிழ் மாணவர்களும், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும், தமிழ் சமூக அமைப்புகளும், தமிழ் மக்களுமாக ஒன்றிணைந்து சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரிநாள் என பிரகடனப்படுத்தி பேரெழுச்சியாக இன்று தாயகத்தின் கிளிநொச்சி, மற்றும் மட்டக்கிளப்பிலும் ஒன்று திரண்டிருக்கின்றோம்.

வரலாற்று நிகழ்வுகள்

ஈழத் தமிழர்களாகிய நாம் மரபுவழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை உலகுக்கு மீண்டும் பிரகடனப்படுத்துகின்றோம்.

சர்வதேச மேற்பார்வையில் இடைக்கால நிர்வாக பொறிமுறை: ஐ.நாவிடம் கோரிக்கை | Interim Mechanism Under International Supervision

வட்டுக்கோட்டை தீர்மானம், திம்பு கோட்பாடு, பொங்கு தமிழ் பிரகடனம் என்பவற்றின் ஊடாக வரலாற்றில் தமிழ் மக்களின் அபிலாசைள் கூட்டாக பலமுறை வெளிப்படுத்தப்பட்ட போதிலும், ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நாம் திரண்டுள்ளோம்.

இலங்கை தீவின் வரலாற்றில் தமிழர்களும், சிங்களவர்களும் தம்மைத் தாமே ஆழும் சுயாதீன இராட்சியங்களை கொண்டிருந்தனர்.

காலனித்துவ ஆட்சியாளர்களான போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியர்கள் தங்களுடைய சுமார் 300 வருட ஆரம்ப ஆட்சி காலத்தில் சிங்கள இராட்சியங்களையும், தமிழ் இராட்சியங்களையும் தனித்தனியாக நிர்வகித்து வந்தனர்.

1833 ஆம் ஆண்டு சோல்புரூக் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் தம்முடைய நிர்வாக நடைமுறையை இலகு படுத்துவதற்காக சிங்கள இராட்சியங்களும் தமிழ் இராட்சியங்களும் பிரித்தானியர்களால் இணைக்கப்பட்டது, என்ற வரலாற்று உண்மையை முதலில் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வரலாற்று நிகழ்வுகளை முற்றாக புறந்தள்ளி எண்ணிக்கையில் பெரும்பான்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் பிரித்தானியர்களால் கைமாற்றப்பட்டது.

சிறிலங்கா சுதந்திரம்

1948 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரம் அடைந்ததிலிருந்து அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களவர்களுக்கு கடும் தேசிய வாதத்தைப் போசித்தும், ஊக்கப்படுத்தியும் வந்துள்ளதோடு, தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு தமது இராணுவ பலத்தை பயன்படுத்தி வருவதை உலக நாடுகளும் பாராமுகமாக பார்த்துக் கொண்டு இருப்பதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

சர்வதேச மேற்பார்வையில் இடைக்கால நிர்வாக பொறிமுறை: ஐ.நாவிடம் கோரிக்கை | Interim Mechanism Under International Supervision

சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பதற்காக 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை வழங்கி தமது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்தியிருந்தனர் என்பதை பன்னாட்டு சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1985 ஆம் ஆண்டு பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் சுயநிர்ணய உரிமை கோட்பாட்டை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர் என்பதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழர்களின் தேசிய இன பிரச்சினைக்கு அரசியல் வழியில் தீர்வு காண்பதற்குரிய நடைமுறைகளில் முன்னேற்றம் காணப்படாததன் விளைவாக தமிழரின் ஆயுதப் போராட்டம் தொடர்ந்ததோடு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் அரசியல் இராணுவ பலமாக மேலெழுந்து அடுத்து அடுத்துவந்த சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகளாக பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் செய்துகொண்ட போதிலும் சிங்கள ஆட்சியாளரின் நேர்மையற்ற அணுகுமுறைகளால் பேச்சுவார்த் தைகளில் தீர்வுகள் எதுவும் எட்டப்பட முடியவில்லை என்ற கசப்பான உண்மை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

77 தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த வருடங்களுக்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த சிங்கள ஆட்சியாளர் களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைகளின் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

அதியுயர் இனவழிப்பு 

அதியுயர் இனவழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், கலாச்சாரம் மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கி நிற்கும் அனைத்து கட்டுமாணங்களும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

சர்வதேச மேற்பார்வையில் இடைக்கால நிர்வாக பொறிமுறை: ஐ.நாவிடம் கோரிக்கை | Interim Mechanism Under International Supervision

வடக்கு மாகாண சபையில் கடந்த 10.02.2015 ஆம் ஆண்டிலும் பின்னர், 16.09.2015 இல் தமிழக சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானங்களின் ஊடாக தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் நிகழ்த்திய இனப்படுகொலைகளை உலகுக்கு அம்பலப்படுத்தியிருந்ததையும் நாம் கூட்டாக மீண்டும் ஒரு தடவை அனைவரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

இறுதிப் போரில் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த அனைத்துலக சமூகம் இன்னமும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை.

காலத்தை இழுத்தடித்து கடப்பாட்டை தட்டிக் கழிக்கும் ஸ்ரீலங்காவின் வழக்கமான தந்திரபாயங்களுக்குள் உள்ளது. அனைத்துலக சமூகமும் சிக்கி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கடந்த 17 வருடங்களாக நீதி கோருவதும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதும் தான் தமிழரின் போராட்டமாக மாறியிருக்கிறது.

இது இயல்பான மாற்றம் அல்ல திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட மாற்றமாகவே கருத வேண்டும் தமிழ் மக்கள் தமது நியாயமான அரசியல் உரிமைகளுக்காக போராட முடியாமல் திசை திருப்பப்பட்டுள்ளனர்.

தமது பிரதான கொள்கையிலிருந்து விலகி நிற்க நிற்பந்திக்கப் பட்டுள்ளார்கள். ஒவ்வொரு கரி நாள் ஒவ்வொரு முறை வரும்போதும் எமது உரிமையை வலியுறுத்தி போராட வேண்டிய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டு நிற்கின்றது.

நாம் எமது தாயகத்தில் ஒட்டுமொத்த அரசியல் உரிமை களையும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சி இனி தீவிரம் பெறவேண்டும். இல்லையேல் புதுப்புதுப் பிரச்சினைகளை முளைவிடச்செய்து சிங்கள தேசம் தமிழரின் உரிமைப் போராட்டத்தை திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்துவிடும் ஆபத்து உள்ளது.

இனப் பிரச்சினை

தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழ்த்தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

பின்வரும் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்

01. எமது உறவுகளை தேடும் உரிமை, பேச்சு உரிமை, வளங்களை அனுபவிக்கும் உரிமை, நீதி கோரும் உரிமை என்பன பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ் நிலை பாதுகாப்பு சட்டம், ஆகியவற்றால் மறுக்கப்படுகின்றது இச்சட்டங்கள் நீக்கப்பட வேண்டும்.

02. தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள் பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தி திட்டம், “கிவுல் ஒயாத்திட்டம் “என்னும் போர்வையில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அபகரிக்கப்பட்ட காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

03. தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து சிங்கள குடியேற்றங் களும், திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

04. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

05. ஆக்கிரமித்து நிற்கும் இராணுவம் வெளியேற வேண்டும்.

06. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப் படவேண்டும்.

07. மனித உரிமை மீறல்கள் வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள், திட்டமிட்ட இன அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் மாணவர்கள் மற்றும் மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கைது செய்யப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

08. தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு ஏற்படுத்தப்படும் அனைத்து வகையான அச்சுறுத்தல்களையும், தடைகளையும் நிறுத்த வேண்டும்.

9. எமது தாயக வளங்கள் சூறையாடப்படுவது உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்.

10. தமிழர் தாயத்தில் உள்ள மனித புதை குழிகள் சர்வதேசத்தின் மேற்பார்வையில் அகழப்பட்டு உரிய நீதி விசாரணைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள்

காலம்காலமாக நடைபெற்று வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பிற்கு சர்வதேச நீதி பொறிமுறை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) சர்வதேச நீதிமன்றம் (I C J) ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பரிகார நீதி வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் அவையில் விசேடமாக உருவாக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் பொறிமுறைகளும் அனுமதிக்கப்பட வேண்டும். இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும்வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று சர்வதேசத்தின் மேற்பார்வையில் உருவாக் கப்பட வேண்டும்.

இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழரின் தேசிய இன பிரச்சனையில் மரபு வழி தாயகம், தமிழ்த் தேசியம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படையில் எட்டப்படும் எந்தவொரு அரசியல் தீர்வும் சர்வதேசத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.

அத்துடன் ஈழத்தமிழர் களின் தலைவிதியை ஈழத் தமிழர்களே தீர்மானித்து எம்மை நாமே ஆழக்கூடிய நிரந்தர தீர்வு பொது வாக்கெடுப்பின் ஊடாக மேற்கொள்ளப் படவேண்டும் என்பதை தமிழ் மக்கள் சார்பாக இப்பிரகடனத்தின் ஊடாக உலகுக்கு அறிவிக்கின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் குறித்த மனு ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் ஆணையாளர் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments