சட்டவிரோதக் குடியேறிகள் வணிக ரீதியிலான கனரக வாகனங்களை (Lorry/Truck) ஓட்டுவதற்கான உரிமம் (CDL) பெறுவதைத் தடுக்கும் வகையில், டெலிலா சட்டம் (Delilah Law) எனும் புதிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் (State of the Union Address 2026) ஆற்றிய உரையின்போது, சட்டவிரோதக் குடியேறிகளால் ஏற்படும் சாலை விபத்துகள் குறித்து ட்ரம்ப் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
மூளைக் காயம்
குறிப்பாக, கடந்த 2024ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர் ஒருவர் ஓட்டி வந்த 18 சக்கர லாரி மோதியதில், டெலிலா கோல்மேன் (Delilah Coleman) என்ற ஐந்து வயதுச் சிறுமி மூளைக் காயம் மற்றும் முடக்குவாதம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளானதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில், தற்போது ஏழு வயதாகும் அந்தச் சிறுமி மற்றும் அவரது தந்தை மார்கஸ் கோல்மேன் ஆகியோரை நாடாளுமன்றத்திற்கு நேரில் வரவழைத்துக் கௌரவித்த ட்ரம்ப், இந்தத் துயரத்திற்குச் சட்டவிரோதக் குடியேற்றமே காரணம் எனச் சாடியுள்ளார்.
ஆங்கிலம் பேசத் தெரியாத மற்றும் சாலை விதிகளைப் படிக்க முடியாத சட்டவிரோதக் குடியேறிகளால் அமெரிக்கக் குடிமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓட்டுநர் உரிமம்
இதனால், எந்த மாகாணமும் இவர்களுக்கு வணிக ரீதியிலான ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அமெரிக்காவில் லாரி போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் சுமார் 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி ஓட்டுநர்கள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக 14,000 இற்கும் மேற்பட்ட ஓட்டுநர்களின் உரிமங்கள் ஆங்கிலப் புலமை இல்லாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
