ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், பாகிஸ்தானின் கராச்சி நகர் மற்றும் ஈராக்கின் பக்தாத் நகர்களில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது சிலர் அமெரிக்க தூதரகத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
8 பேர் உயிரிழப்பு
கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தூதரக வளாகத்திற்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த பொருட்களுக்கும் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
இதேவேளை அமெரிக்காவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க ‘பசுமை வலயத்திற்குள்’ நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
