களுத்துறை பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து உரிமையாளரை நோக்கித் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்த முயன்ற இனந்தெரியாத நபர் ஒருவர், வீட்டின் உரிமையாளரால் கதிரை மற்றும் கத்தியால் தாக்கப்பட்டுத் துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த “பெத்தா” எனப்படும் நபர், வீட்டின் உரிமையாளரிடம் வாங்கிய 30,000 ரூபா கடன் பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி அவரது வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு முயற்சி ; துரத்தி துரத்தி தாக்கப்பட்ட நபர் | Gunmen Enter House Man Chased And Attacked

பதில் தாக்குதல்

இதன்போது, அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே திடீரெனத் துப்பாக்கியை எடுத்து வீட்டு உரிமையாளரைச் சுட முயற்சித்துள்ளார்.

அவ்வேளை வீட்டின் உரிமையாளர் அங்கிருந்த கதிரை ஒன்றினால் துப்பாக்கிதாரியைத் தாக்கியதுடன், வீட்டில் இருந்த வாளை எடுத்து அவர் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, உரிமையாளர் தாக்கியதால் காயமடைந்த துப்பாக்கிதாரி, அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

தகவலறிந்து விரைந்த பொலிஸார், காயமடைந்த நிலையில் இருந்த சந்தேக நபரை ஒரு பிஸ்தோல் ரகத் துப்பாக்கி மற்றும் 4 ரவைகளுடன் கைது செய்தனர்.

காயமடைந்த சந்தேக நபர் அலவ்வ, அளுத் வீதியைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டதுடன், அவர் தற்போது நாகொடை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடன் கொடுக்கல் வாங்கல் காரணமாகவே இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தப்பியோடிய “பெத்தா” எனும் நபரை கைது செய்யக் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments