ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் ஐரோப்பிய நாடுகள் இணைந்தால், அவையும் ஈரானின் பதிலடி தாக்குதல்களுக்கு இலக்குகளாக மாறும் என்று ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் மஜித் தக்த் ரவாஞ்சி எச்சரித்துள்ளார்.பிரான்ஸ் ஊடகமொன்று அளித்த ஆங்கில பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக ஏதேனும் நாடுகள் தாக்குதல் நடத்தினால், அவை ஈரானின் பதிலடி நடவடிக்கைகளுக்கு உரிய இலக்குகளாக மாறும் என்று அவர் கூறியுள்ளார்.
மோதலுக்கு முன்னரே எச்சரிக்கை
அமெரிக்காவுக்கு சில ஐரோப்பிய நாடுகள் லாஜிஸ்டிக் ஆதரவு வழங்கி வருவதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தக்த்-ரவாஞ்சி, “ஈரானுக்கு எதிரான இந்த தாக்குதல் போரில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்கனவே எச்சரிக்கை வழங்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Image Credit: Reuters
மேலும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் குறித்து பேசும்போது, கடந்த வாரம் இந்த மோதல் தொடங்குவதற்கு முன்பே அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை வழங்கியதாகவும், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தியால் அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் ஈரானின் தாக்குதலுக்கான இலக்குகளாக மாறியதாக மஜித் தக்த் ரவாஞ்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்கா திடீரென தூதரக பேச்சுவார்த்தைகளை கைவிட்டதாகவும், தாக்குதல்கள் தொடங்குவதற்கு முன்பு ஈரான் நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
