மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் பெண் ஒருவரை வீசிச்சென்ற சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்கள் குற்றச்செயல்களுக்காக பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைதானவர்கள் மட்டக்களப்பில் நடைபெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மூன்று வயது குழந்தையுடன் இளம் தாய் ஒருவர் சென்றிருந்த நிலையில் காணாமல் போனார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை குறித்த தாய் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டதுடன், அவரது குழந்தை வயல் பகுதி ஒன்றில் தனித்துவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Information Released Incident Shook Batticaloa

குறித்த தாய் மீட்கப்பட்ட கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் மற்றுமொரு பெண்ணின் சடலமும் இதன்போது மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பம் தொடர்பில் சிசிரிவி காட்சிகளைக் கொண்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி அடையாளப்படுத்தப்பட்டு அதன் உரிமையாளர் இனங்காணப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா, வேர்க்கண்டசேனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவன் மனைவி, கணவனின் சகோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட கணவன், மனைவி சம்பவ தினமான வியாழக்கிழமை வவுணதீவு பகுதியில் குழந்தையுடன் பேருந்துக்காக காத்திருந்த இளம் தாயைக் கண்டு, முச்சக்கர வண்டியை நிறுத்தி மட்டக்களப்பு நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது தாம் அடகு வைத்த குழந்தையின் தங்க ஆபரணத்தை மீட்கப் போவதாகத் குறித்த தாயிடம் இருந்து சந்தேகநபர்கள் தகவல்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பின்னர் மட்டக்களப்பு நகருக்கு சென்று தாம் மீண்டும் இதே வழியில் வருவதாகவும், அதற்கு குறைந்தளவான கட்டணத்தை தருமாறும் கோரியுள்ளனர். இதற்கு குறித்த தாயும் இணக்கம் வெளியிட்டுள்ள நிலையில், சந்தேகநபரான பெண் ஒருவர் நகை அடகு நிலையத்திற்கும் அந்த தாயுடன் சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

மீண்டும் அவர்களை தமது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற நிலையில், வலையிறவு பாலத்தை அண்மித்த போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த பழச்சாறு போத்தலைக் அருந்தக் கொடுத்துள்ளனர். அவர் அதனை வாங்கி அருந்திய பின்னர் மயக்கமடைந்துள்ளார்.

இதன்போது கொத்தியாபுலை பகுதியில் உள்ள வயல்பகுதியில் குழந்தையினை எரிந்துவிட்டு குறித்த முச்சரக்கவண்டி காஞ்சிரங்குடா சென்று அங்கு மயக்கமடைந்த பெண்ணின் சுமார் நான்கரை பவுன் தாலிக்கொடியை கழட்டியுள்ளனர்.

பின்னர் அதனை சந்தேகநபரின் மனைவி எடுத்துக் கொண்டு முச்சக்கரவண்டியில் இருந்து வீட்டில் இறங்கியுள்ளார்.

மட்டக்களப்பை உலுக்கிய கிணற்றுச் சம்பவம் ; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Information Released Incident Shook Batticaloa

இதனையடுத்து வீட்டிலிருந்த தனது காரில் மயக்கமுற்ற பெண்ணை ஏற்றிக்கொண்டு தமது சகோதரனையும் அழைத்து சென்ற சந்தேகநபர் நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை விற்று பெற்றுக் கொண்ட பணத்தில் காரை கொள்வனவு செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட நகைகள் விற்பனை செய்த மற்றும் அடகுவைக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இருவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments