அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரானிய தூதர்களைப் படுகொலை செய்ய வேண்டும் என அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் எழுந்துள்ள கருத்துகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரானிய தூதுவர்களுக்கு அச்சுறுத்தல்
அந்த பதிவில் அவர், “ஈரானுக்கு ‘நல்லெண்ணம்’ இல்லை என்றும், ஈரான் ‘மிரட்டிப் பணம் பறிக்கும்’ செயலில் ஈடுபடுவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், அதே வேளையில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரானிய தூதர்களைப் படுகொலை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் அரசியல் மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள் பகிரங்கமாகப் பரிந்துரைக்கின்றனர்,” என்று தெரிவித்துள்ளார்.
அரசு பயங்கரவாதம்
இந்த நிலையில், இத்தகைய கருத்துக்கள் பயங்கரவாதம், வன்முறை மற்றும் கொலைகளைத் தூண்டிவிட்டு, அதன் மூலம் மிரட்டிப் பணியவைக்கும் ஒரு கொள்கையைச் சாதாரணமாக்குவது போலத் தெரிவதாக பாகேய் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மேலும், அரசு பயங்கரவாதத்தை பகிரங்கமாகத் தூண்டும் இத்தகைய செயல்களை அனைவரும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும் பாகேய் அழைப்பு விடுத்துள்ளார்
