ஹோர்முஸ் நீரிணை வழியாக இஸ்ரேலியக் கப்பல்கள் எக்காலத்திலும் பயணிப்பதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று இயற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்றத் துணை சபாநாயகர் ஹமித்ரெசா ஹாஜி-பாபேய் (Hamidreza Haji-Babaei) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வணிகக் கப்பல்கள்
இந்த மசோதாவின்படி, எதிரி நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் கப்பல்கள், ஈரானுக்கு உரிய போர்க்கால இழப்பீடுகளை வழங்காதவரை இந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தப் புதிய சட்ட விதிகளின் கீழ் பிற நாடுகளின் வணிகக் கப்பல்களும் ஈரானிடம் முறையான முன் அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்ற பின்னரே இக்கடல்வழிப் பாதையைக் கடக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து இனி ஒருபோதும் போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பாது என ஹாஜி-பாபேய் எச்சரித்துள்ளார்.
இதன் மூலம், உலகின் மிக முக்கியமான எரிசக்தி விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையின் மீதான தனது முழுமையான கட்டுப்பாட்டை நிலைநாட்ட ஈரான் முயற்சிப்பது தெளிவாவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
