பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிப்பதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, இன்று அதே சட்டத்தைப் பயன்படுத்தி கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்று மக்கள் போராட்ட முன்னணி வன்மையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசின் இந்த இரட்டை வேட அரசியலும், இனவாதத்தைக் கிளறிவிட்டு அரசியல் இலாபம் தேடும் சதித்திட்டங்களும் நாட்டை மீண்டும் ஒரு அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது என்றும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.

நுகேகொடவில் அமைந்துள்ள மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அதன் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாகப் பகிரங்கமாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.

14 நாள்கள் விளக்கமறியல் 

ஆனால், தற்போது புதிய சட்டம் வரும் வரை அதனைப் பக்குவமாகப் பயன்படுத்துவதாகக் கூறி, கருத்துச் சுதந்திரத்தை நசுக்கத் தொடங்கியுள்ளனர்.

வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்! அநுர அரசைச் சாடும் துமிந்த நாகமுவ | Prevention Terrorism Act Applied Despite Promise

இதற்கமைய, இளம் கலைஞர் ஒரு பாடலைப் பாடியமைக்காகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முற்பட்டதாகக் கூறி அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஒரு கலைஞனைத் தண்டிப்பதற்கான போலியான முத்திரையாகும்.

தேர்தல் பிரசாரங்களின் போது, ஈழம் குறித்துப் பேசியவர்களால் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடிந்ததென்றால், இன்று ஒரு கலைஞர் பாடும்போது அது பயங்கரவாதமாக மாறுவது ஏன்? இதுவே இந்த அரசாங்கத்தின் தார்மீகமற்ற இரட்டை வேடமாகும்.” – என்று சாடினார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வெசாக் கூடு உடைப்புச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அவர், “இந்தச் சம்பவம் சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் இணைந்து செய்த காரியமல்ல. சில இனவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயலாகும். சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களைப் பரப்பி, மீண்டும் ஒரு ‘கறுப்பு ஜூலையை’ உருவாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேடச் சிலர் துடிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் சங்கமே இந்தப் பழிசொற்களைப் பகிரங்கமாக நிராகரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாக்குறுதியை மீறி பயங்கரவாதத் தடைச் சட்டம் பிரயோகம்! அநுர அரசைச் சாடும் துமிந்த நாகமுவ | Prevention Terrorism Act Applied Despite Promise

கடந்த காலங்களில் யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்ட காலத்தைப் போலவே, இன்றும் வன்முறைகளைத் தூண்டிவிட்டு அப்பாவி மக்கள் மத்தியில் முரண்பாடுகளை உருவாக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இதற்குப் பலியாக வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விவகாரங்களில் புலனாய்வுத் துறையினரின் பங்கு குறித்து இன்று பேசுபொருளாகியுள்ள நிலையில், அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே அரசு இவ்வாறான அடக்குமுறைகளைக் கையாள்கின்றது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பிரதான தரப்பினர் ஒருவித இரகசியப் புரிதலுடன் செயற்படுவதால், மத்திய வங்கி மோசடி அல்லது ஏனைய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்றில் எவரும் பேசுவதில்லை.

ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல. மக்கள் போராட்டத்தின் உண்மையான அபிலாஷைகளை நிறைவேற்றவும், இனவாதத்தை நிராகரிக்கும் உண்மையான மக்கள் சார் எதிர்க்கட்சியை உருவாக்கவும் ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும். அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்றார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments