வரலாற்று ரீதியான இராஜதந்திர மோதல்கள் வலுத்து வரும் நிலையில், போலந்தில் நடைபெறவுள்ள உக்ரைன் மறுசீரமைப்பு தொடர்பான முக்கிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தவிர்த்துள்ளார்.

போலந்தின் பால்டிக் துறைமுக நகரான க்டான்ஸ்க் நகரில் வியாழக்கிழமை தொடங்கவுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டிற்கு, ஜனாதிபதிக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, அவருக்குப் பதிலாக உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ தலைமையிலான தூதுக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

இருதரப்பு உறவைச் சீரமைக்க

இரண்டாம் உலகப் போரின் போது போலந்து மக்களைக் கொன்று குவித்த ஒரு தேசியவாத இராணுவப் பிரிவின் பெயரை, உக்ரைனின் தற்போதைய இராணுவப் பிரிவு ஒன்று தனக்குச் சூட்டிக் கொண்டதால் இரு நாடுகளுக்கும் இடையே அண்மையில் சர்ச்சை வெடித்தது.

இதன் உச்சகட்டமாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு வழங்கப்பட்டிருந்த போலந்தின் உயரிய அரசு விருதான ‘ஓர்டர் ஒஃப் த வையிட் ஈகிள்’ என்ற விருதை போலந்து ஜனாதிபதி கரோல் நாவ்ரோட்ஸ்கி பறித்தார்.

இதற்குப் பதிலடியாக, ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனின் மூன்று முன்னாள் ஜனாதிபதிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த போலந்து விருதுகளைத் துறந்ததால் இருநாட்டு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

இந்த மோசமான இராஜதந்திர சூழலில், மாநாட்டைப் பாதிப்பில் இருந்து பாதுகாக்கவும் இருதரப்பு உறவைச் சீரமைக்கவும் உக்ரைன் பிரதமர் தலைமையிலான குழு தற்போது போலந்து சென்றுள்ளது.

உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பு

உக்ரைன் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளில் போலந்து நிறுவனங்கள் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

போலந்து மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்கும் உக்ரைன் ஜனாதிபதி : நீடிக்கும் வரலாற்று மோதல் | Ukrain President Skip Conference Conflict Continue

தற்போதைய பதற்றத்தைத் தணிக்க முயன்று வரும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், இந்த மாநாட்டிற்காக சுமார் 200 ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், போர் முடிவுக்கு வந்த பிறகு போலந்து நிறுவனங்கள் உக்ரைனில் முதலீடு செய்வதற்கு இது ஒரு முக்கிய வாய்ப்பு என்பதால் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைதி காக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளையில், ரஷ்ய வான்வழித் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்புத் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதே தங்கள் குழுவின் முதன்மை நோக்கம் என்று உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments