தடைகளைத் தவிர்ப்பதற்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்களை இரகசியமாகப் பரிமாற்றுவதற்கும் ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்களின் சட்டவிரோத வலையமைப்பைக் கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிராந்திய ஸ்திரமின்மையை உருவாக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், இராணுவத் திறன்களை மேம்படுத்தவும் ஈரான் பயன்படுத்தும் நிதியாதாரங்களைத் துண்டிக்கும் நோக்கில், ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகபட்ச அழுத்தக் கொள்கையின் கீழ் அமெரிக்க திறைசேரி இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) மற்றும் அரச அமைப்புகளுக்குப் பயனளிக்கும் வகையில் நிதியைச் சட்டவிரோதமாகப் பணமாக்கிய குற்றச்சாட்டில், துபாயைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஷெல்பிட் (Shelbit) கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனம் மற்றும் அதன் நிறுவனரான ஈரானிய வெளிநாட்டவர் சியாவாஷ் கைவன்பூர் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்க திறைசேரியின் அறிவிப்பு
மேலும், முன்னர் தடைசெய்யப்பட்ட ஈரானிய டிஜிட்டல் சொத்து பரிமாற்றகங்கள் சார்ந்த மில்லியன் கணக்கான டொலர் மதிப்பிலான பரிவர்த்தனைகளைக் கையாண்ட குற்றச்சாட்டில், ஈரானைத் தளமாகக் கொண்ட அபான் டெதர் (Aban Tether) என்ற டிஜிட்டல் சொத்து பரிமாற்ற நிறுவனம் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், ஈரானிய வங்கிகள் சட்டவிரோதமாகப் பணத்தைப் பரிமாற உதவிய துபாயைச் சேர்ந்த மேலும் பல நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மீதும் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரானிய ஆட்சியைத் தொடர்ந்து இயங்க வைக்கும் இத்தகைய சட்டவிரோத நிதி வலையமைப்புகளை அமெரிக்க திறைசேரி தொடர்ந்து வேட்டையாடி அழிக்கும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.
