அவுஸ்திரேலியாவில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் இரு வேறு உயிரியல் பெற்றோருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த அரிதான சம்பவம் பதிவாகியுள்ளது.

குயின்ஸ்லாந்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவர், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்காகத் தன்னார்வ மாற்றுத்தாயாகச் செயல்படச் சம்மதித்தார். இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்தத் தம்பதியின் கரு, இவரின் கருப்பையில் செலுத்தப்பட்டது.

எனினும், அதே காலப்பகுதியில் இவர், தனது கணவருடன் இயல்பான முறையிலும் கருத்தரித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள்

கரு மாற்றப்பட்டு சுமார் இரண்டு வாரங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில், அவர் இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு (DNA) பரிசோதனையில், பெண் குழந்தை மாற்றுத்தாய்மை கோரிய தம்பதிக்கும், ஆண் குழந்தை குறித்த பெண்ணுக்கும் (மாற்றுத்தாய்) மற்றும் அவரது கணவருக்கும் சொந்தமானது என்பது உறுதியானது.

2025 ஆம் ஆண்டு நவம்பரில் இவ்விரு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டன. எவ்வித சிக்கல்களும் இன்றி, இரு தம்பதியினரும் தங்களின் உயிரியல் குழந்தைகளை ஏற்று வளர்த்து வருகின்றன.

இதேவேளை, ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை வேறு வேறு பெற்றோரின் உரிமைகளின் கீழ் பிரிப்பதைத் தடுக்கும் வகையில் குயின்ஸ்லாந்தின் மாற்றுத் தாய்மைச் சட்டங்கள் அமைந்துள்ளன.

இதனால் இந்த விவகாரத்தில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு குயின்ஸ்லாந்து சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் இருவரும் ஒரே கர்ப்ப காலத்தில் வளர்ந்த “கர்ப்பகால இரட்டையர்கள்” (Gestational Twins) மட்டுமே என்றும், தற்போதைய தனித்துவமான சூழலைக் கருத்திற் கொண்டு மாற்றுத்தாய்மைச் சட்டத்தின் கீழ் இவர்கள் “பிறப்பு உடன்பிறப்புகள்” (Birth Siblings) ஆகக் கருதப்பட மாட்டார்கள் என்றும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு, சட்டப்பூர்வமாகப் பெற்றோர் உரிமைகளை அந்தந்தக் குடும்பங்களுக்கு வழங்க வழிவகுத்தது.

குழந்தைகள் பாதுகாப்பான சூழலில் வளரும் பட்சத்தில், அவர்களைப் பிரித்து வளர்ப்பது உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தாது எனச் சுயாதீன ஆலோசகரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் வளரும்போது அவர்களின் பிறப்புக்குப் பின்னாலுள்ள உண்மைச் சூழலைத் தகுந்த வயதில் புரியவைக்கவும், இரு குடும்பங்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் தீர்மானித்துள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments