இந்தியாவின் பீகார் மாநிலத்தில், இந்துப் பண்டிகையில் பங்கேற்பதற்காகக் கங்கை நதியில் பயணித்த அதிக பாரம் ஏற்றப்பட்ட படகு கவிழ்ந்ததில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 

இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. படகு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, இரவு நேர இருளையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

கைப்பேசிகள் மற்றும் மின்விளக்குகளின் உதவியுடன் நீரில் மூழ்கியவர்களையும் உடல்களையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மீட்புப் பணியில் ஈடுபட்ட இளம் கிராமவாசியான ரவி யாதவ், படகு கவிழ்ந்ததும் குழந்தைகள் உதவி கேட்டு அலறும் சத்தம் கேட்டதாகவும், இருட்டின் காரணமாக மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். கைப்பேசிகள் மற்றும் மின்விளக்குகளின் உதவியுடன் மூன்று குழந்தைகளை மீட்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.

படகில் அதன் கொள்ளளவைவிட அதிகமானோர் ஏற்றப்பட்டிருந்ததாகவும், அந்தப் படகு சிறியதாகவும் போதிய பராமரிப்பின்றி இருந்ததாகவும் உள்ளூர் கிராமவாசியான ராம்லகன் ராய் தெரிவித்துள்ளார். இந்த விபத்தால் சில குடும்பங்கள் தங்களது குழந்தைகள் அனைவரையும் இழந்துள்ளதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் ஆறு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்களில் நான்கு குழந்தைகளும் இரண்டு பெரியவர்களும் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக உள்ளூர் சுகாதார மைய மருத்துவர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், 13 பேர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அவர் கூறினார். வைஷாலி மாவட்ட ஆட்சியர் வர்ஷா சிங்கும் 13 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

 சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த படகு விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகுந்த வேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடும் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்தின்போது படகு விபத்துகள் நிகழ்வதற்கு அதிகப்படியான பயணிகள் ஏற்றப்படுதல், பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாமை மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் போதிய அளவில் இல்லாமை போன்றவை முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

பீகாரில் நிகழ்ந்துள்ள இந்தத் துயரச் சம்பவம், நீர்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments