என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். சகல காலங்களுக்கும் பொருத்தமான ஒன்றாகும். சகல காலங்களுக்கும் பொருத்தமான திருக்குறளை இயற்றிய வள்ளுவப் பெருந்தகை கூட, “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்று பெருமைபடக் கூறினாலும், அதே குறளில் இன்னொன்றையும் சொன்னார். அதாவது, இல்வாழ்க்கையில் கற்பெனும் திண்மை இருக்கப்பெற்றாற்தான், பெண் பெருமையுடையவள் ஆகிறாள். என்று கூறினார்.

“பெண்ணிற்க பெருந்தக்க யாவுள, கற்பெனும் திண்மையுண்டாகப் பெறின்”

பெண்ணை விடப் பெருமைக்குரியவர் யாருமில்லை என்று பாராட்டிய அவர், அதற்கொரு நிபந்தனையும் விதிக்கிறார். இது தான் அந்நாளைய தமிழர்களின் மனப்போக்காக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. சங்கப்பாடல்கள் பலவும் இத்தகைய போக்கையே பிரதிபலிக்கின்றன. பூதப்பாண்டியனின் மனைவியான ‘பெருங்கோப்பெண்டு’ எனும் அரசி அவன் மறைந்தபோது, அவளும் உடன் கட்டை ஏறுவதற்குத் தயாரானாள். அப்போது, புலவர் பலர் கூடி அவளை அவ்வாறு செய்யாமல் தடுப்பதற்கு முயன்றபோது அவள், “பல்சான்றீரே! பல்சான்றீரே!” என்று அழைத்து, “எனக்கு என்னுடைய கணவன் இறந்துபட்ட அவனுடைய சிதையிலே பற்றி எரிகின்ற தீ தாமரைக்குளத்து நீர்போல் இன்பம் தருவதாகும். ஆகவே என்னை யாரும் தடுக்காதீர்கள். நான் விதவை வாழ்வு வாழ விரும்பவில்லை” என அந்த அரசியே பாடுகின்றாள். அப்படியொரு பாடல் புறநானூற்றில் இடம் பெற்றிருக்கின்றது. அந்தப் பாடலிலே அவள்,

“பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிது ஆகுக தில்ல, எமக்கு எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே”
(புறநானூறு பெருங்கோப்பெண்டு பாடல் 246)

என்று சொல்கின்ற மனப்போக்கு, நாம் எதிர்பார்க்கின்ற புதுமைப் பெண்ணின் மனப்போக்காக அமைந்திருக்கவில்லை. ஆனால், சங்க காலத்தில் அத்தகைய மனப்போக்கை அரசிகள் முதல் சாதாரண பெண்கள் வரை கொண்டு இருந்தார்கள். அதைப்போலவே, சிலப்பதிகாரத்தில் ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் அவையிலேயே கற்பின் செல்வி கண்ணகி தோன்றி நீதி கேட்டு குரல் கொடுத்த போது: “நான் நீதி தவறிவிட்டேன்” என்ற உணர்வு அவனைக் குடைய அவன் அரியணை மீது இறந்து வீழ்ந்தான். அவன் அருகிலே வீற்றிருந்த அவனுடைய இல்லாள், அரசி கோப்பெருந்தேவி துடிதுடித்து மாண்டாள் என இளங்கோவடிகள் பாடுகின்றார். ஆக ஒருவன் இறப்பானாயின், அவன் இறந்த உடனேயே கற்புடைய மகளாக இருந்தால், அவனுடைய மனைவியும் உடனடியாக உயிரைத்துறக்க வேண்டும் அல்லது உடன் கட்டை ஏறியாவது தன்னை மாய்த்துக் கொள்ளவேண்டும். என்கிற ஒரு மனப்போக்கு அன்றைக்கு நடைமுறையில் இருந்தது என்பதைத்தான் இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. இதை இளங்கோவடிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. ஆகவே தான் அவர் ஒரு இலட்சியப் பெண்ணாகக் தன்னுடைய காவியத்தலைவியான கண்ணகியைப் படைத்து இருக்கின்றார். கோவலன் கொலையுண்ட செய்தி கேட்டபோது துடிதுடித்துப் போன கண்ணகி, அவன் கொலையுண்ட இடத்துக்குச் சென்றாள். அவனுடைய உடலைக் கட்டித் தழுவி அரற்றினாள். புலம்பினாள். அந்த இடத்திலேயே தானும் உயிரை விட்டு விடவில்லை. அல்லது அவனது உடலைச் சிதையிலே அடுக்கி எரியவிட்டு, தானும் அத்தீயிலேயே விழுந்து தன்னுயிரைப் போக்கிக் கொள்ளவில்லை. மாறாகக் கொதித்தெழுகிறாள் கண்ணகி. மதுரை மாநகரத்தின் வீதியிலே வலம் வருகிறாள். தனது கணவனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகறியக் கூவுகிறாள். தனது கணவன் கள்வன் அல்லன் என்பதை நிலை நிறுத்த வேண்டும் என்ற வெறி அவள் உள்ளத்திலே எழுகின்றது. அரசவைக்குச் செல்கின்றாள். அரசனுக்கு முன்னாலே அவள் நீதி கேட்கிறாள். “தேறா மன்னா!” என்று மன்னனை அழைக்கக் கூடிய துணிவு அவளுக்கு இருந்திருக்கிறது.

அவள் நீதியை நிலைநிறுத்தியதால் தான், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தனது உயிரையே மாய்த்துக் கொண்டான். நீதி தவறிற்று என்பதை உணர்ந்த மறுகணமே, அவனது உயிர் போயிற்று. நீதியை நிலை நிறுத்திய கண்ணகி அதற்குப் பின்னால் மேற்குத் திசை நோக்கிச் சென்று மலையுச்சியில் மறைகின்றாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. சிலப்பதிகாரத்துக்கு முன்னும் பின்னுமாக எழுந்துள்ள எந்த நூலிலும் கண்ணகி போன்ற பாத்திரப்படைப்பு உருவாக்கப்பட்டதே இல்லை என்று சொல்ல வேண்டும். கண்ணகி ஒரு வித்தியாசமான பாத்திரப்படைப்பு. அந்நாளைய பெண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று சமுதாயம் கருதிற்றோ, அதற்கு மாறான ஒரு பெண்ணை கண்ணகியின் வடிவிலே இளங்கோவடிகள் படைத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும்.

பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஒரு பெண் வீரம் நிறைந்தவள் என்பதற்கான இலக்கணமென்பது வித்தியாசமானது. ஒரு பெண் வீரம் நிறைந்தவள் என்பதைப் பற்றி சங்ககால பெண்பால் புலவரான காவற்பெண்டு’ என்பவர் புறநானூற்றில் பின்வருமாறு பாடியிருக்கின்றாள்.

சிற்றில் நற்றூண் பற்றி “நின்மகன்
யாண்டுள னோ? என வினவுதி என் மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!”
(புறநானூறு – காவற்பெண்டு பாடல் 86)

என்று கூறுகிறார். “என் மகன் எங்கே என்று கேட்கிறாய் என் மகன் எங்கே உளான் என்பதை நானறியேன். ஆனால், புலி வாழ்ந்த குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு இதோ இருக்கின்றது, குகையில் இருந்து வெளியேறிய என் மகன் போர்க்களத்தில் தான் இருப்பான், அங்கே போய்ப் பார்” என்று பெருமிதத்துடன் அத்தாய் கூறுவதாகக் காவற்பெண்டு பாடுகிறாள். அதாவது, ஒரு பெண் வீரமகனைப் பெற்றெடுத்தாள் என்பதுதான் அவளுக்குப் பெருமை, அவள் தான் வீரத்தாயாகக் கருதப்பட்டாள்.

ஓக்கூர் மாசாத்தியார் என்னும் புலவர், அதே புறநானூற்றில் இன்னொரு வீரத்தாயை நம் கண்முன்னே அழகாகச் சித்தரிக்கின்றார்:

“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே!
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து, களத்து ஒழிந் தனனே
நெருநெல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி, ஆண்டுப் பட்டனனே
இன்னும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து கூட் இப்
பாறு மயிர்க் குடமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
‘செருமுக நோக்கிச் செல்க’ என விடுமே”
(புறநானூறு – ஓக்கூர் மாசாத்தியார் பாடல் 279)

என்று பாடுகிறார். முதல் நாள் போரில் தன் தந்தையை இழந்த இவள், அடுத்த நாள் போரிலே தன்னுடைய கணவனைப் பறிகொடுத்த இவள் மீண்டும் மறுநாள் போர்ப்பறை முழங்குவதைக் கேட்டு, உடனே தரித்து, கையிலே வேல் கொடுத்து, அவனைப் போர்;க்களத்துக்கு இன்முகத்துடன் அனுப்பி வைத்தாள். இவள் அன்றோ வீரத்தாய் என்று அவர் வியந்து கூறுகின்றார். இன்றைய சங்ககாலப் புலவர்கள் அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இவ்வாறுதான் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு பெண்ணின் வீரம் என்பது அவளுடைய தந்தை, சகோதரன், கணவன், பிள்ளைகள் ஆகியோரைப் போர்க்களத்துக்கு மனமுவந்து அனுப்பி வைப்பது. இதுதான், அவளுக்கு வீர்த்தாய் என்ற பட்டத்தைப் பெற்றுத்தரும். பெண்களில் வீரம் என்பது, வீட்டின் எல்லைக்குள்ளே முடங்கி விட்டது. பெண்கள் ஆயுதம் எடுத்துப் போராடினார்கள். அவர்கள் போர்க்களத்துக்கு போனார்கள் என்பதை நம்முடைய சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. நம்முடைய இலக்கிய மரபும் அதைக்கூறவில்லை. பொற்கோட்டு இமயத்தில் புலி பொறித்து ஆண்ட பூம்பூகார் சோழனாக இருந்தாலும், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனாக இருந்தாலும் கற்பின் செல்வி கண்ணகி சிலை அமைக்க இமயம் வரை சென்று கனகவிசயர் தலையிலே கல்லைச் சுமக்க வைத்துக் கொண்டு வந்த சேரன் செங்குட்டுவனாக இருந்தாலும் சரி, பிற்காலத்தில் இராசராசன் – இராசேந்திரன் போன்ற மாபெரும் மன்னர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் காலத்திலெ படைகளிலே பெண்களும் இருந்தார்கள் – ஆயுதம் தாங்கிப் போரிட்டார்கள் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடையாது.

சங்க காலத்திலிருந்து பாரதி காலம் வரை இதுதான் நம்முடைய மரபாக இருந்து வந்திருக்கின்றது.

நம்முடைய இலக்கிய சான்றுகளானாலும் சரி, கல்வெட்டுகள் பட்டையங்களிலே சொல்லப்படுகின்ற செய்திகளானாலும் சரி, ஆண்கள்தான் ஆளரிமையைப் பெற்றிருந்தார்களே தவிர, பெண்களுக்கு அந்த உரிமை இருந்தது என்பதற்கான சான்றுகளில்லை. பெண்கள் அரசாண்டார்கள் என்பதற்கான சான்றுகளும் இல்லை.

மிகப் பிற்காலத்தில் வெள்ளையர்கள் இந்த நாட்டைப் பிடிப்பதற்குச் சற்று முன்னால், மதுரையிலே நாயக்க மன்னர்கள் ஆண்டபோது ராணி மங்கம்மாள், ராணி மீனாட்சி போன்றவர்கள் ஆண்டிருக்கிறார்கள். தங்களுடைய புதல்வர்கள் அல்லது பேரர்களுக்கு வயது வரவில்லை என்பதற்காக இடைக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பை இவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

சிவகங்கையிலே தனது கணவன் இறந்த பின்னர் வேலு நாச்சியார் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவருக்குப் பக்கபலமாக மருது சகோதரர்கள் இருந்து நாட்டை ஆண்டார்கள். ஆனால் அந்த அரசிகள் கூட ஆயுதம் தாங்கிப் போர்க்களத்துக்குப் போனார்கள் என்ற வரலாறு கிடையாது.

பிற்காலத்தில் தோன்றிய புலவர்கள் பெண்களை இன்னும் கேவலமாகச் சித்தரிக்கத் தொடங்கினார்கள். பெண்பாற் புலவரான ஒளவையார் அல்ல பிற்காலத்தில் தோன்றிய ஒளவையார், தான் பாடிய பாடல்களில் எல்லாம் பெண்களுக்கு சில இலக்கணங்கள் வகுத்துள்ளார். அவர் பாடிய ஆத்திசூடியில்,

‘தையல் சொல் கேளேல்’
(ஆத்திசூடி -62)

பெண்கள் பேச்சைக் கேட்காதே! என்று ஒரு பெண்பால் புலவரான ஒளவையாரே பாடும் படியான சூழ்நிலை இருந்திருக்கிறது. அதே ஒளவையார் கொன்றைவேந்தனில்,

‘துடியாப் பெண்டிர் மடியின் நெருப்பு’
(கொன்றைவேந்தன் – 41)

என்று கூறுகிறார். கணவன் சொற்படி கேட்காத பெண்கள், மடியிலே கட்டிக்கொண்ட நெருப்புச் சமமானவர்கள் என்று இகழ்ந்து உரைக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய்,

‘தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்’
(கொன்றைவேந்தன் -42)

என்று கூறுகிறார். கணவனை இகழ்கின்ற பெண்டுகள், அவனுக்கு எமனாக வாய்த்தவர்கள் என்று சொல்கிறார். அதே கொன்றைவேந்தனில், சிறப்பாக பெண்கள் பூணவேண்டிய அணிகலன் எது என்பதைப் பற்றி அவர் சொல்லும்போது,

‘பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்’
(கொன்றைவேந்தன் – 66)

என்று சொல்கிறார்.

அதே ஒளவையார், அவர் பாடிய மூதுரையில் கீழ்க்கண்ட பாடலைப் பாடியிருக்கிறார்.

“கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தோர் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்
கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.”
(மூதுரை – 27)

என்று சொல்கிறார் பெண்பால் புலவரான ஒளவையார் பாடிய பாடல்களிலே இத்தகைய மனப்போக்கு வெளிப்படுமேயானால், ஆண்பால் புலவர்கள் எப்படியெல்லாம் பாடியிருப்பார்கள் என்பதை நான் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்கும் சில எடுத்துக் காட்டுக்களை நான் இங்கே தருகிறேன்.

அதி வீர ராம பாண்டியன் என்னும் மன்னன், தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பிற்காலத்துப் பாண்டியர்களில் ஒருவன். அவன் பாடிய வெற்றி வேற்கையில் பின்வருமாறு கூறுகின்றான்:

“பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல்”
(வெற்றி வேற்கை -11)

பெண்களுக்கு அழகு என்பது, கணவனோ மற்ற ஆண்களோ சொல்கிற வார்த்தைகளுக்கு அடி பணிந்து போக வேண்டுமே தவிர, அதை எதிர்பார்த்துப் பேசக்கூடாது என்று இலக்கணம் வகுத்தனர். அதைப் போல, பிற்கால இலக்கியங்களில் ஒன்றான நீதி வெண்பாவில் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது மிகவும் மோசமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் அதிகமாகப் பேசக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்த எழுந்த இப்பாடலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

“பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமி தான் அதிரும்
பெண் இருவர் பேசில் விழும் வான் மீன்கள் – பெண் மூவர்
பேசில் அலை சுவறும் பேதையே!
பெண் பலர்தாம்
பேசில் உலகு என்னாமோ பின்”
(நீதி வெண்பா -31)

பெண்கள் ஆமைகளாக, ஊமைகளாக அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற கருத்தை இந்தப் பாடலின் மூலம் அந்தப் புலவர் வலியுறுத்துகிறார்.

குமரகுருபர அடிகளார் பாடிய நீதி நெறி விளக்கத்தில், பெண்களுக்குக் கணவன் தான் தெய்வம் என்ற கருத்தைப் பின்வருமாறு வலியுறுத்துகிறார்.

“குலமகட்கு தெய்வம் கொழுநனே! மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும் –
அறவோர்க்கு அடிகளே தெய்வம்!
அனைவோர்க்கும் தெய்வம்
இளலமுகப் பைம்பூண் இறை”
(நீதி நெறி விளக்கம் – 27)

அவரைப் போலவே, அறநெறிச்சாரம் என்ற நூலைப் பாடிய முனைப்பாடியார் பின்வருமாறு பெண்களுக்கு இலக்கணம் வகுக்கிறார். என்னென்ன குணங்கள் ஒரு பெண்ணிடம் குடி கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர் பின்வருமாறு சொல்கிறார்.

“கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நூணுடைமை
கண்டது கண்டு விழையாமை – விண்டு
வெறுப்பன செய்யாமை வெஃகாமை நீக்கி
உறுப்போடு உணர்வுடையாள் பெண்”
(அறநெறிச்சாரம் – 159)

என்று பெண்களிடம் இருக்க வேண்டிய குணாதிசயங்கள் பற்றி அவர் பாடி முடிக்கிறார். அடுத்து வந்த பட்டினத்தார் இன்னும் பெண்களைக் கேவலமாகக் கருதுகிறார். அவர் பாடிய திருஏகம்ப மாலையில் சொல்கிறார்.

“பெண்ணாகி வந்து ஒரு மாயப்
பிசாசம் பிடித்திட்டு என்னைக்
கண்ணால் வெருட்டி முலையால்
மயக்கிக் கடிதடத்துப் புண்ணாம்
குழி இடைத் தள்ளி என்
போதப் பொருள் பறிக்க
எண்ணாது உனைமறந் தேன்இறை
வாகச்சி ஏகம்பனே!”
(திருஏகம்ப மாலை)

இறைவனைச் சிலர் மறந்ததற்கு என்னென்ன காரணங்கள் என்று சொல்ல வந்தவர், அந்தப் பழியையும் பெண்மீது போடுகிறார். பெண்ணாகி வந்தது ஒரு மாயப் பிசாசம் என்று பெண்களை இகழ்ந்து உரைக்கின்ற போக்கு பிற்காலத்திலே நிலவியிருந்தது என்பதற்குப் பட்டினத்தாரின் பாடல் சரியான சான்றாகும்.

சங்க காலத்திலிருந்து நிலவி வந்த இத்தகைய போக்கை அடியோடு தகர்த்து எறிந்தான் மகாகவி பாரதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஒளவையார் பாடிய ஆத்திசூடிக்கு எதிராக அவன் புதிய ஆத்திசூடியைப் பாடினான். அதிலே:

“தையலை உயர்வு செய்”
(புதிய ஆத்திசூடி -50)

என்று கம்பீரமான அவன் கூறினான்.

பெண்களை உயர்வு செய்கின்ற சமுதாயம்தான் உயர்ந்து ஓங்கும் என்ற கருத்தை வலியுறுத்த, “தையலை உயர்வு செய்” என்று சொன்னான். பெண்பால் புலவரான ஒளவையார், “தையல் சொற் கேளேல்” என்று சொன்னார். ஆனால், இவன் ஒரு புதிய ஆத்திசூடி பாடி அதிலே “தையலை உயர்வு செய்” என்று முழங்கினான்.

“மாதர்தமை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!”

என்று முழங்கினான்.

“பெண்மை வாழ்க என்று
கூத்திடுவோமடா!
பெண்மை வெல்கவென்று
கூத்திடு வோமடா!”

என செம்மாந்து பாடினான் பாரதி. பிற்காலத்துத் தமிழ் புலவர்கள் பெண்களுக்கு வகுத்த இலக்கணத்துக்கு மாறாக, பாரதி தான் கற்பித்த புதுமைப்பெண்ணுக்கு இலக்கணம் வகுத்தான்.

“நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும்
அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச்
செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர்
திறம்புவ தில்லையாம்”

புதுமைப்பெண் என்று நெஞ்சு நிமிர்த்திப் பாடினான். தன்னுடைய புதுமைப்பெண் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு அவன் இவ்வாறு இலக்கணம் வகுத்தான்.

பெண் விடுதலையில் பாரதியே மிகுந்த நாட்டம் கொண்டிருந்தான். அவனுடைய பாடல்களில் இந்தக் கருத்தை வலியுறுத்தினான். ‘பெண்கள் விடுதலைக் கும்மி’ என்ற ஒரு தனிப்பாடலையே இதற்காக அவன் பாடினான். பெண்கள் விடுதலை பற்றி கும்மியடிக்க வந்த பாரதி இவ்வாறு கூறுகின்றான்.

“ஏட்டையும் பெண்கள்
தொடுவது தீமையென்றெண்ணி
யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப்
பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”
(பெண்கள் விடுதலைக் கும்மி)

அவனுக்குப் பின்னால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் அதே பாதையில் நடைபோடுகிறார். பெண் குழந்தையைத் தாலாட்டும் போது, எவ்வாறு தாலாட்ட வேண்டும் என்பதை அவர் பின்வருமாறு கூறுகின்றார்.

“நாய் என்று பெண்ணை நாவில் வார்க்கும்
இப்புவிக்குத் தாய் என்று காட்டத்
தமிழர்க்கு வாய்த்தவளே!”

“பெண் குழந்தைத் தாலாட்டு” என்று ஒரு பெண்ணே ஒரு தாலாட்டுப் பாடுவதாக அவர் வர்ணிக்கிறார்.

ஆண்களோடு பெண்களைச் சரிநிகர் சமானமாகக் கருதவேண்டும் என்று பாரதி கனவு கண்டான். அந்தக் கனவை இன்னும் தாய்த் தமிழகத்தில் நனவாக்கவில்லை என்று தான் கூறவேண்டும். இன்னும் தமிழர்களின் மனப்போக்கிலே பெரியளவிலே எந்த மாற்றமும் வந்து விடவில்லை. சங்க காலத்திலிருந்து இன்று வரை தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் பற்றிய மனப்போக்கு என்பது முற்றிலும் மாறிவிட்டது என்று கூறமுடியாது. இன்னமும் தமிழ்ப் பெண்கள் அவர்களின் அடிமைத் தளையை உடைத்தெறிந்து விட்டார்கள் என்று சொல்வதற்கு வழியில்லை.

ஆனால், சேய்த் தமிழகமான தமிழீழத்தில் ஒரு ‘மகத்தான புரட்சி’ அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“The Great leap Foreard” என்று ஆங்கிலத்திலே சொல்லுவதைப் போல, பெண்களின் அடிமைத்தளையை உடைத்து எறியும் முயற்சியில் ‘புலிப்பாய்ச்சல் வேகம்’ அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தாய்த் தமிழகத்தில் உள்ள பெண்கள் எவ்வாறு எல்லாம் இழிவு படுத்தப்பட்டார்களோ, அவ்வாறெல்லாம் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் என்று போதிக்கப்பட்டார்களோ, அதைப் போன்ற நிலைமைகள்தான், அங்கே தமிழீழத்தில் நிலவிற்று. மாற்றம் எதுவும் இல்லை. நீண்ட காலமாக, இங்குள்ள மூடப் பழக்கங்கள் அங்கேயும் பரவியிருந்தன. வரதட்சணைக் கொடுமை அல்லது சீதனக் கொடுமைகள் தமிழகத்தில் எப்படியுண்டோ அப்படி அங்கேயும் உண்டு. பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னாலே, முகஞ் சுழிக்கிற சமுதாயமாகத் தமிழ்ச் சமுதாயம் இன்றும் இருந்து வருகிறது. அதனாலேதான், உசிலம்பட்டி போன்ற இடங்களில் பெண் சிசுக்களைக் கொல்லுகின்ற வேலைகள் நடக்கின்றன.

இப்படி மூடநம்பிக்கை கவிழ்ந்துள்ள ஒரு சமுதாயத்தில் “உண்மையான பெண் விடுதலை” எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை, விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் சிந்தித்த மாதிரி எந்தத் தமிழனும் சிந்திக்கவில்லை. வாய் அளவிலே பெண் விடுதலையைப் பற்றிப் பேசினால் அல்லது எழுதிக் குவித்தால் மட்டும் பெண் விடுதலை பெற்று விட முடியாது. பாரதி பாடியது போல், ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானம் என்ற நிலையை ஏற்படுத்தினால் ஒழிய, பெண் விடுதலை என்பது ஏட்டுச் சுரைக்காயாகத் தான் திகழும் என்பதை உணர்ந்த அவர் ஒரு புரட்சிகரமான திட்டத்தை வகுத்தார். விடுதலைப் போரில் பெண்களும் பங்கு பெற வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். அவர்களின் பங்களிப்பு எப்படி இருப்பது என்ற வினா எழுந்த போது, சங்காலத்துப் பெண்களைப்போல, அவர்களுடைய தந்தைமாரையோ, சகோதரர்களையோ, கணவனையோ அல்லது புதல்வர்களையோ போருக்கு அனுப்பி வைப்பதோடு பெண்களின் பங்களிப்பு நின்று விடக்கூடாது என முடிவு செய்தார்.

முதல் நாட் போரில் தன்னுடைய தந்தையை இழந்தாள். அடுத்த நாட் போரிலேயே தன்னுடைய கணவனை இழந்தாள். மூன்றாம் நாள் போருக்கு அவளே வாளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள் என்ற நிலை, சங்க காலத்திலும் இல்லை அதற்குப் பிற்பட்ட காலத்திலும் இல்லை. ஆனால், பிரபாகரன் அவர்களின் தமிழீழத்தில், தன்னுடைய தந்தையோ சகோதரர்களோ விடுதலைப் படையில் சேர்ந்து ஆயுதம் தூக்கி, தங்கள் மண்ணை விடுவிக்கப் போராடுவதற்கு முன்வராமல் பதுங்கியிருந்தாலும், அந்த வீட்டில் இருந்த பெண்கள் வெளியேறி வந்து விடுதலைத் தானையில் தங்களை அங்கத்தவர்களாக்கிக் கொண்டு ஆயுதப் பயிற்சி பெற்று, ஆயுதம் தூக்கித் தங்கள் மண்ணை விடுவிக்கப் போராடுகிறார்கள் என்ற நிலைமையைப் பிரபாகரன் ஏற்படுத்தினார். இதைத்தான், ‘புலிப்பாய்ச்சல் முன்னேற்றம்’என்று நான் குறிப்பிட்டேன். ஏனென்று சொன்னால் வீட்டை விட்டு வெளிவராத பெண்கள் – படி தாண்டாத பத்தினிகளாக விளங்கிய பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி, போர்ப்படையிலே சேர்ந்து, ஆயுதப் பயிற்சி பெற்று ஆண்களோடு சரிநிகர் சமானமாக நின்று, களத்திலே முன்னணியிலேயே போரிட்டு, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்கிற ஒரு சூழ்நிலையைப் பிரபாகரன் உருவாக்கியது என்பது அற்புதமானது. இது பெண்களின் அடிமைத் தளையைச் சுக்குநூறாகத் தகர்த்தெறிந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வாயளவிலே பெண் விடுதலையை அவர் பேசவில்லை. ஒரு மண் விடுதலை பெற வேண்டுமென்றால், அதிலே ஆணுக்கு எவ்வளவு பங்களிப்பு இருக்கிறதோ அதைப் போன்ற பங்களிப்பு பெண்களுக்கும் இருந்தால் தான் பெண் விடுதலை என்பது உண்மையிலேயே சாத்தியமாகும் என்பதை அனுபவ பூர்வமாகக் கண்டு உணர்ந்தார்.

ஒரு மண்ணை விடுவிப்பதும் அந்த மண்ணைப் பாதுகாப்பதும் ஆணின் கடமை என்று கருதிய சமுதாய மனப்போக்கை அவர் மாற்றினார். அத்தகைய மனப்போக்கு நிலவுவதால்தான், ஆணைச் சார்ந்து பெண் வாழவேண்டிய நிலைமை இருக்கின்றது என்பதை அவர் உணர்ந்தார்.

ஆண் வலிமை நிறைந்தவன், அவனால் தான் தன்னையும் தன்நாட்டையும் தன்னைச் சார்ந்திருக்கின்ற மனைவியையும் மக்களையும் பாதுகாக்க முடியும் என்ற நிலைமையை மாற்றி அமைத்தால் ஒழிய, பெண் விடுதலை என்பது உண்மையில் நடைமுறையில் இருக்காது என்பதை அவர் உணர்ந்தார். ஒரு பெண் தன்னுடைய தந்தையைச் சார்ந்து வாழ்கிறாள். பின்னாலே திருமணமானவுடன், தன்னுடைய கணவனைச் சார்ந்து வாழ்கிறாள், அவனுக்கு பின்னாலே தன்னுடைய புதல்வனைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைமையிலே இருக்கிறாள்.

ஆகவே அவள் யாரையாவது சார்ந்துதான் வாழ்ந்தாக வேண்டும் என்ற நிலையை மாற்றினால் ஒழிய, பெண்ணடிமைத்தனம் போகாதென்பதை அவர் புரிந்திருந்தார். எனவேதான், விடுதலைப்புலிகள் இயக்கத்திலே பெண்களைச் சேர்ப்பது என்பதை முடிவு செய்தார். அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். உலக நாடுகளிலே, அது அரச சார்பான இராணுவமானாலும் எதிர்த்துப் போராடுகிற புரட்சிப் படைகளானாலும் பெண்களின் பங்களிப்பு என்பது அதில் என்ன? அவர்கள் காயமடைந்த வீரர்களுக்கு மருந்து கட்டுவது, அவர்களுக்கு பணிவிடை புரிவது அத்தகைய பணிகள்தான் பெண்களுக்கு வழங்கப்பட்டன. பெண்கள் ஆயுதம் தாங்கிப் போராடுபவர்களாக எந்த நாட்டிலும் அனுமதிக்கப்படவில்லை. இந்தியாவிலும், ஏன் வல்லரசான அமெரிக்காவிலும் சமீப காலத்தில்தான் பெண்களை ஆயுதம் தாங்குவதற்கு அனுமதித்திருக்கிறார்கள். போர்ப் பயிற்சி கொடுக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே அத்தகைய நிலையை உருவாக்கியவர் பிரபாகரன்தான் என்பதை எண்ணும் போது நம்முடைய உள்ளம் பெருமிதத்தால் பூரிக்கின்றது.

வெறும் ஆயுதப் பயிற்சி பெற்று விடுவதனாலேயே பெண் விடுதலை சாத்தியமாகி விடுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால், பெண்ணடிமைத் தனத்திற்கு முக்கியமானது காலம் காலமாக அவர்கள் மனதிலே ஆணுக்கு அடங்கி நடக்கவேண்டியவள் என்ற எண்ணம் பதிப்பிக்கப்பட்டு வருகிறது. நம்முடைய இலக்கியங்களும் அதைத்தான் பதிப்பித்தன என்பதை ஏற்கனவே இந்தக் கட்டுரையின் தொடக்கத்திலே நாம் பார்த்தோம். அந்த எண்ணத்தை அடியோடு பெண்கள் உள்ளத்திலிருந்து அகற்றவேண்டும் என்பதற்காகத்தான், பிரபாகரன் அவர்கள் இந்த நிலையை எடுத்தார். இதன் விளைவாக இன்றைக்குத் தமிழீழத்திலிருந்து பெண்கள் தலை நிமிர்ந்து நடக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

பல்வேறு களங்களிலே முன்னணியிலே நின்று பெண்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்கின்ற வீரம் செறிந்த நிகழ்ச்சிகளை நாம் அன்றாடம் கேட்கிறோம். தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டு எதிரியை அழிப்பது என்பதற்காக உருவாக்கப்பட்ட கரும்புலிகள் இயக்கத்திலும் இன்று பெண்கள் சேர்ந்து தங்கள் உயிரைத் துச்சமாக மதித்துத் தங்கள் நாட்டுக்காகத் தங்கள் மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்கின்ற அற்புதமான வீரஞ்செறிந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்டு நம்முடைய மெய் சிலிர்க்கின்றது. இதன் விளைவாக, தமிழீழப் பெண்கள் அந்த மண்ணிலே தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். அவர்கள் உள்ளங்களைக் கவ்வியிருந்த ஒரு மாயை இன்று விலக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் என்னென்ன ஆயுதங்களைத் தூக்கி என்னென்ன வீர சாகசங்களைச் செய்வார்களோ அதைவிடச் சிறப்பாகத் தங்களாலும் செய்ய முடியும் என்ற ஒரு பெருநம்பிக்கை அவர்களது உள்ளங்களிலே துளிர்விட்டிருக்கிறது. அதையே செயல் வடிவத்திலும் அவர்கள் இன்றைக்கும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆக, பெண் விடுதலையைப் புலிப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றப் பாதையிலே பிரபாகரன் கொண்டு போய்க்கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

பன்னெடுங்காலமாகத் தமிழ் சமுதாயத்தில் நிலவி வந்திருக்கின்ற பெண்ணடிமைத் தனத்தை அடியோடு தகர்த்தெறிவதற்கான புரட்சிகரமான முயற்சி தமிழீழத்தில் பிரபாகரன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் கூறும் நல்லுலகமெங்கும் இந்தப் புரட்சி அலை, விரைந்து பரவும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

எழுத்துருவாக்கம்:

பழ. நெடுமாறன்.
நன்றி – களத்தில் இதழ்கள் 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments