பேருந்துகளில் இளம் பெண்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு ‘அங்க சேட்டைகளில்’ ஈடுபடும் சில ஆசாமிகளுக்கு, கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வைத்து இளம் பெண் ஒருவர் கொடுத்த தர்ம அடிதான் இப்போது தலைநகரில் பேசுபொருளாக உள்ளது.
கல்கிசையிலிருந்து கொழும்பு பல்கலைக்கழகத்தை நோக்கி வந்துகொண்டிருந்த அந்தப் பேருந்தில், இளம் பெண் ஒருவர் பயணச்சீட்டுப் பெற்றுக் கொண்டிருந்த சமயம் பார்த்து, வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து ஒரு வயதான ஆசாமி பேருந்தில் ஏறியுள்ளார்.
பயணிகளின் நெரிசலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அந்த முதியவர், மெதுவாக அந்த இளம் பெண்ணுக்கு அண்மையாகச் சென்று தனது ‘கைவரிசையைக்’ காட்டத் தொடங்கியுள்ளார்.
முதியவர் தானே என்று பொறுத்துப் பார்த்த அந்தப் பெண், பேருந்து பம்பலப்பிட்டியை நெருங்கியதும், பொறுமை இழந்து அந்த நபரை எச்சரித்துள்ளார். ஆனால், ‘வயதானாலும் புத்தி மாறாத’ அந்த ஆசாமி, பெண்ணின் எச்சரிக்கையைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. நெரிசலைப் பயன்படுத்தி மீண்டும் தனது சில்மிஷங்களைத் தொடர்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் எரிச்சலின் உச்சத்துக்கே சென்ற அந்தப் பெண், பேருந்துக்குள் இருந்த பயணிகள் அனைவருக்கும் கேட்கும் வகையில் சத்தமிட்டு, “உடல் அங்க சேட்டைகளை நிறுத்திக் கொள்ளும் படி” பொதுவெளியில் வைத்து அந்த ஆசாமியைக் கிழித்துத் தொங்கவிட்டார். அப்போதும் அடங்காத அந்த நபர், சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் தனது லீலைகளை அரங்கேற்றத் தொடங்கியுள்ளார்.
இறுதியாகப் பேருந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றதும், இறங்குவதற்காக வந்த அந்தப் பெண், சற்றும் எதிர்பாராத விதமாகத் தனது இடது கையால் அந்த முதியவரின் முகத்தில் ‘பளார் பளார்’ என அடுத்தடுத்து இரண்டு அறைகளைக் கொடுத்துள்ளார்.
அத்தோடு நில்லாமல், அந்த ஆசாமியின் முகத்தில் எச்சிலையும் துப்பிவிட்டு கெத்தாகப் பேருந்திலிருந்து இறங்கிச் சென்றுள்ளார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும், அந்த முதியவரைப் பார்த்து ஏளனமாகச் சத்தமிட்டுச் சிரிக்கத் தொடங்கினர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த பேருந்து நடத்துனரும் சும்மா இருக்கவில்லை. அந்த முதியவரைப் பயணிகளுக்கு முன்னிலையில் வெளுத்து வாங்கியதுடன், அதே பேருந்து தரிப்பிடத்திலேயே அவரைப் பலாத்காரமாகப் பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
அத்துமீறிய முதியவருக்குப் பல்கலைக்கழகப் பகுதியில் வைத்து பெண்ணொருவர் கொடுத்த இந்த ‘அதிரடி ட்ரீட்மென்ட்’ அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
