சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 வயதான இரட்டைச் சகோதரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், சாதாரண விபத்தல்ல அது ஒரு திட்டமிட்ட கொலை என்பது தற்போதைய பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

கடந்த நவம்பர் 02ஆம் திகதி, வீட்டிற்குள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த இரு யுவதிகளும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

உறவினர்களின் சந்தேகத்தின் பேரில் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளில், இந்தச் சகோதரிகள் வேறு ஒரு இடத்தில் வைத்து தீ மூட்டி, பின்னர் அவர்களது சடலங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், வீட்டின் பின்புறத்திலிருந்து இரண்டு கையுறைகள், எரிபொருள் போத்தல் மற்றும் தீப்பெட்டி என்பனவும் தடயங்களாக மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த யுவதிகளில் ஒருவருடன் காதல் தொடர்பிலிருந்த நபர், அவரை இரவு விடுதி ஒன்றுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், நான் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளேன், அவ்வாறான இடங்களுக்கு வர முடியாது என அந்த யுவதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே குறித்த நபர் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் நடந்த அன்று குறித்த வீட்டிற்கு முன்பாக சுமார் 5 பேர் கொண்ட குழுவொன்று நின்றதை நேரில் கண்டதாக நபர் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது சந்தேகநபரான காதலனிடம் சுன்னாகம் பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் விசாரணைகளில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

கல்வி கற்று எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய இரு இளம் உயிர்கள் இவ்வாறு அநியாயமாகப் பறிக்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments