குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரிக்கை நடந்துவரும் ஐநா மனித உரிமை பேரவையினுடைய கூட்டத்தொடருக்கு, வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கான ஒருமித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி குற்றவிசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் கோரிக்கையுடன் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கடித வரைபை கடந்த 01.10.2024 அன்று அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா ஆகியோருடைய கையொப்பமிட்ட கடிதங்கள் , ஐநா மனித உரிமை உயரஸ்தானிகருக்கும், மனித உரிமை பேரவையின் பிரதான நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு அறிக்கை

கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இக்கட்சித் தலைவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு வந்த கூட்டு அறிக்கைகளின் பிரகாரமும், உயர் அதிகாரிகளுடனான இணையவழிச் சந்திப்புகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் உள்ளடக்கிய காத்திரமான விரிவான உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் பிரதிநிதிகளால் ஐ.நாவுக்கு விசேட கடிதம் | Tamil Politicians Un Special Letter

இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாணத்தில் அரசால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனக்குடி பரம்பல் சிதைப்பையும், தாயகத்தின் தொடர் நிலப்பரப்பை துண்டாடும் நடவடிக்கைகளையும் விளக்கமாக வெளிப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதிக்கான கோரிக்கைகள், குற்றவாளிகளை தண்டனை வழங்காது இழுத்தடித்து முடிவில்லாமல் தொடர்ந்து வருவதையும் கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மனித உரிமைப் பேரவையின் பிரதான நாடுகளின் பிரதிநிதிகளுக்கான கடிதத்தில், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்துவது தான் ஒரே ஒரு வழி என்றும் அதை விரைந்து நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மக்களினுடைய இனப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இவ்வறிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments