J

ஜே.வி.பி. தமது கடந்த கால கொலை வெறிக்கலாசாரத்திலிருந்து இன்னும் திருந்தவில்லை, எதிர்காலத்திலும் மாறப்போவதில்லை என்பதை யாழ். முதன்மை வேட்பாளர் நடந்து கொண்ட விதம் தெளிவாகக் காட்டுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார். 

சர்வகட்சிகளைச் சேர்ந்த யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் கலந்துகொண்ட நிகழ்வில், கேள்வி கேட்ட சக வேட்பாளர்களை அச்சுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கருணாநாதன் இளங்குமரன் செயற்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “அச்சுறுத்துகின்ற பாணியிலும், சபை நாகரிகத்துக்கு ஒவ்வாத வகையிலும், அரச அதிகாரம் தங்களுடைய கையில் இருக்கின்றது என்ற ஆணவத்தோடும், ஏனைய கட்சிகளையும் பொதுமக்களையும் மதிக்காத ஒரு ஜனநாயக அரசியலுக்கு ஒவ்வாத முறையிலும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் நடந்து கொண்டார்.

கொள்கை நிலைப்பாடுகள் 

இது, ஜே.வி.பி. தமது கடந்த கால கொலை வெறிக்கலாசாரத்திலிருந்து இன்னும் திருந்தவில்லை, எதிர்காலத்திலும் மாறப்போவதில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

மேலும், யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள ஜே.வி.பியின் வேட்பாளர்கள், ஜே.வி.பி. முன்வைக்கின்ற கொள்கை நிலைப்பாடுகளுக்கோ அல்லது இலஞ்சம், ஊழல்களை ஓழிப்பதற்கோ தகுதியானவர்கள் அல்லர். ஏனெனில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் பலருடைய மறுபக்கம் அவர்களுடைய கொள்கை நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது.

ஒரு பொது வெளியில் ஏற்பாட்டாளர்கள், பொதுமக்கள், பிற கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் ஜே.வி.பியின் முதன்மை வேட்பாளர் நடந்து கொண்ட விதம் ஒரு அபாயச் சங்கை ஊதி நிற்கின்றது.

ஜே.வி.பி தரப்பின் மீது கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ள சட்டத்தரணி சுகாஸ் | Sukash Blames Jvp Party Politicians

ஒரு ஜனாதிபதிப் பதவியை வைத்துக் கொண்டே இந்த அளவு ஆட்டம் ஆடுகின்ற ஜே.வி.பிக்கு நாடாளுமன்ற அதிகாரமும் கிடைக்கப் பெற்றால் எவ்வளவு தூரம் சர்வாதிகாரமாகச் செயற்படுவார்கள் என்பதற்கு இந்த மக்கள் அரங்கம் சாட்சியாக அமைந்துள்ளது.

இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ் மக்கள் சிந்தித்து தென்னிலங்கைக் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. இப்படியானவர்களுக்கு வாக்குகளால் ஒரு பதிலடி வழங்கி தமிழ் மண்ணில் இருந்து அவர்களை விரட்டியக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *