உக்ரைன் (Ukraine) போரை முடிவுக்கு கொண்டுவர டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வகுக்கும் வியூகத்தின் ஒருபகுதியாக பிரித்தானிய (British) இராணுவம் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான (Volodymyr Zelenskyy) ட்ரம்பின் தொலைபேசி அழைப்புக்கு பின்னரே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர 800 மைல் தடை செய்யப்பட்ட பகுதியை உருவாக்க டொனால்டு ட்ரம்ப் வியூகம் வகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இதனால் பிரித்தானிய இராணுவமும் உக்ரைனில் களமிறங்கக் கூடும் என தகவல்கள் குறிப்பிடுகின்றது.
அமைதிப் பேச்சுவார்த்தை
உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதுடன் ஜனவரி மாதம் பதவிக்கு வந்தவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்குவேன் என்றும் முன்பு தெரிவித்திருந்தார்.
தற்போது ட்ரம்ப் வகுத்துள்ள வியூகம் என்பது உக்ரைனில் போர் முனையில் இராணுவத்தை குறைப்பது, அத்துடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சிகளை உக்ரைன் கைவிட வேண்டும் என்பது.
இதற்கு கைமாறாக, இனி விளாடிமிர் புடின் உக்ரைன் பகுதிகள் மீது தாக்குதல் முன்னெடுக்காமல் இருக்க அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கும் ஆனால், உக்ரைனில் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் அந்த 800 மைல் நிலப்பரப்பில் அமெரிக்க (America) இராணுவம் களமிறங்காது.
உக்ரைனில் அமைதி
அத்தோடு, அந்த திட்டத்திற்கான நிதியுதவியும் மேற்கொள்ளாது, உக்ரைன் இராணுவத்திற்கு தேவையான பயிற்சி மற்றும் இதர ஆதவுகளை அளிக்க அமெரிக்கா எப்போதும் தயார் என்றே ட்ரம்பின் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், உக்ரைனில் அமைதி திரும்பும் பொருட்டு, அமெரிக்க இராணுவத்தை களமிறக்கும் திட்டமில்லை என்றும் இந்த திட்டத்திற்கான நிதியுதவியை போலந்தும் (Poland), ஜேர்மனியும் (Germany), பிரித்தானியாவும் மற்றும் பிரான்சும் (France) முன்னெடுக்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப் வெற்றையை அடுத்து விளாடிமிர் புடின் (Vladimir Putin) வெளிப்படையாக பாராட்டியதும் மற்றும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா (Russia) எப்போதும் தயார் என அறிவித்ததும் இந்த திடீர் முடிவுகளுக்கு ஒரு முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.