நிர்வாகம்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
21.03.2025

தமிழீழத் தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வை முன்னெடுப்போர் தொடர்பான தமிழீழ அரசியல்துறையின் நிலைப்பாடு!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு தொடர்பான, தமிழீழ அரசியல்துறையின் அழுத்தமான நிலைப்பாட்டை, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற போராளிகளோடும், மக்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் கருதி, அனைத்து நாடுகளில் இயங்கிவரும், தமிழீழ அரசியல்துறையால் உத்தியோகபூர்வமாக இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.

எமது தேசியத் தலைவரின் வரலாறானது, தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது, என்ற தெளிவான கோட்பாட்டோடு, தமிழீழ அரசியல்துறை செயற்பட்டு வருகின்றது. எமது தெளிவான நிலைப்பாட்டை மக்களோடும், போராளிகளோடும், இந்த அறிக்கை ஊடாக பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். முக்கியமாக இந்த வீரவணக்க நிகழ்வு தொடர்பாக தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட, புலம்பெயர் கிளைக் கட்டமைப்புக்கள் இதுவரை ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளதாகவே நாம் அறிகின்றோம். தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கிளைக் கட்டமைப்புகளோடு இணைந்து செயற்பட்டு வரும் மக்கள், இன்றைய சூழலில் இந்த வீரவணக்க நிகழ்வைப் புறக்கணிக்கும் வாய்ப்பு உள்ளதாக நாங்கள் உணர்கின்றோம். ஆகையால் இந்த நிகழ்வை நடாத்துவதற்கு முன்னர், மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழீழ விடுதலைப் பயணத்தை முன்னகர்த்த வேண்டிய, பல தயார்படுத்தல் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளதால், அவசர அவசரமாக இந்த வீரவணக்க நிகழ்வை தற்சமயம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளதாக மக்கள் கருதவில்லை.

தேசியத் தலைவருக்கான வீரகாவிய நிகழ்வை நடாத்துவதற்கு முன்னர், தமிழீழத் தேசியத் தலைவர் எந்த இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக, தமிழீழ விடுதலை புலிகள் என்ற மாபெரும் புரட்சி இயக்கத்தை தோற்றுவித்தாரோ, அந்த தமிழீழ இலட்சிய நோக்கம் ஈடேற்றப்பட்டு, சுதந்திர தமிழீழத்தில், எந்த இடத்தில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதோ, அதே இடத்தில் மக்கள் தமிழீழத்தைப் பிரகடனம் செய்யும் போது, தமிழீழத் தேசியத் தலைவருக்கான வீரகாவியத்தை வரலாறு எடுத்துச்செல்லும்.

தமிழீழ அரசியல்துறையின் உறுதியான நிலைப்பாடு இவ்வாறிருக்கையில், எம்மோடு இணைந்து பல ஆண்டுகளாகக் காத்திரமான பங்காற்றிவரும், முக்கியமான உறுப்பினர்கள் சிலரின் பெயர்களும், இந்த வீரவணக்க நிகழ்வோடு தொடர்பு படுத்தப்பட்டிருப்பதை நாங்கள் முற்றாக மறுதலிக்கின்றோம். தமிழீழ அரசியல்துறை உறுப்பினர்கள் எவருக்கும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்த வீரவணக்க நிகழ்வுகளுக்கான திகதிகளுக்கும், எந்தவித தொடர்பும் கிடையாதென்பதை, போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேசியத் தலைவரின் வீரவணக்க நிகழ்வைச் செய்வதற்கு முன்னர், அதற்கு தகுதியானவர்களாக தம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இவ்விடத்தில் வலியுறுத்த விரும்புகிறோம். 2009 ஆயுத மௌனிப்பு வரை, எம்மோடு ஒன்றாகக் களமாடி விழுப்புண்ணுற்று, வீழ்ந்து கிடக்கும் மாவீரர், போராளிக் குடும்பங்கள், பொதுமக்கள் என நலிந்துகிடப்போரை தேசியத் தலைவரின் பெருவிருப்பின் அடிப்படையில், இன்றுவரை அவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக மேம்படுத்த எம்மவர்களால் முடியவில்லை. எமது சுதந்திர விடுதலைப் போராட்ட இயக்கம், எமது விடுதலையைத் தீர்மானிக்கும் சக்திவாய்ந்த சில நாடுகளில் தடைசெய்யப்பட்டு, பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தடையை நீக்குவதற்கு, எந்தவித காத்திரமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இனப் படுகொலையாளிகளுக்கு சர்வதேசச் சட்ட நியமனங்களுக்கு ஊடாகத் தண்டனை பெற்றுக் கொடுத்தல் போன்ற முக்கியமான செயற்பாடுகளை முழுவீச்சுடன் செய்ய வேண்டிய இன்றைய காலகட்டத்தில், அவற்றைத் தவிர்த்து தற்போது தமிழீழத் தேசிய தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை நடாத்த விளைவதை, தேசியத் தலைவரால் தமிழீழ இலட்சிய உணர்வு ஊட்டப்பட்டு, அந்த இலட்சிய நோக்கத்தில் இன்றும் தடம் மாறாமல் பயணித்துக் கொண்டிருக்கும், போராளிகள், தேசியச் செயற்பாட்டாளர்கள், உலகவாழ் மக்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உண்மை நிலைமை இவ்வாறு இருக்கையில், குறிப்பிட்ட சில தடம்மாறிய முன்னாள் போராளிகள், சிறு சிறு குழுக்களாக இணைந்து, தேசியத் தலைவர் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதை, ஒரு போதும் உண்மையான போராளிகளும், உணர்வுள்ள தமிழ் மக்களும் அனுமதிக்கமாட்டார்கள்.

சில தடம் மாறிய முன்னாள் போராளிகள் இணைந்து, இந்த வீரவணக்க நிகழ்வை, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் கடைபிடித்து வரும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளைக் குறிவைத்து, கருவறுப்புச் செய்யும் கபடநோக்கத்தோடு செயற்படுவதாக நாம் பலமாகச் சந்தேகிக்கின்றோம். அத்தோடு தமிழீழ இலட்சியப் பயணத்தில், தொடர்ந்தும் காத்திரமான பங்காற்றி வரும், எமது மக்களின் போராடும் மனநிலையைக் குழப்பி, அவர்களின் உறுதியான இலட்சியப் பயணத்தை திசைமாற்றிவிடும் உள்நோக்கமும் இவர்களிடம் பொதிந்திருப்பதாக தமிழீழ அரசியல்துறை கருதுகின்றது.

தேசியத் தலைவர் முன்னெடுத்த தமிழீழ இலட்சியப் போராட்டத்தில், இதய சுத்தியோடு பங்கெடுத்த போராளிகளே! அந்த விடுதலைப் போரில் விழுப்புண்ணுற்று உறுப்புக்களை ஈகம் செய்த பல்லாயிரக் கணக்கான போராளிகளே! மக்களே! தேசியத் தலைவரை உயிருக்கு உயிராக நேசித்த போராளிகளே! மக்களே! உங்கள் எல்லோரதும் பெருவிருப்பமான மாவீரர்களின் கனவை நனவாக்கும்வரை, அரசியல் போரை தொடர்வதுதான், உறுதியான நிலைப்பாடென்பதை நாம் நன்கறிவோம். இந்த விடயத்தில் மௌனமாகக் கடந்துசென்று விடாதீர்களென, எமது அன்பார்ந்த மக்களை உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம். ஒரு சில தடம் மாறிய முன்னாள் போராளிகளால் முன்னெடுக்கப்படும், தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை, தவறான உள்நோக்கத்தோடு முன்னெடுப்பவர்களுக்கும், தேசியத் தலைவர் அவர்களதும், அவருடைய குடும்பத்தினரதும் மாபெரும் தியாகத்தை களங்கப்படுத்துவோருக்கும் எதிராக, எமது மக்களோடு இணைந்து, தமிழீழ அரசியல்துறையும் அதி உச்ச எதிர்வினையாற்றுவோமென உறுதியளிக்கின்றோம்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கி. நல்லையா
நிர்வாகப் பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்

ச. அசோகா
பொறுப்பாளர்
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *