தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை ஒருசேரநினைவுகூருகின்ற தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் கனமழை பெய்துகொண்டிருக்கையிலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. Burwood Reserve மைதானத்தில் 27-11-2024 புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இளையசெயற்பாட்டாளர் செல்வி லக்சிகா கண்ணன் தொகுத்து வழங்க மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பலுடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை மருத்துவர் திரு பாலமுருகன் திருநாவுக்கரசு அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை கடற்புலிகளின் முன்னாள் போராளி திரு அறிவு அவர்கள் ஏற்றிவைத்தார்.
அதனைத்தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.
முதன்மைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு ஹரிதாஸ் ஞானகுணாளன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழத் தாயக விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியாகிய லெப் சங்கர் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர் மேஜர் இசையமுது அவர்களது சகோதரன் திரு விக்கினேஸ்வரன் பாலசுப்பிரமணியம் அவர்களும், முதற்பெண்மாவீரர் 2ம் லெப் மாலதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மாவீரர்களான வீரவேங்கை கலாநிதி 2ம் லெப் காவேரி ஆகிய இரு மாவீரர்களின் சகோதரி திருமதி தங்கேஸ்வரி சிவகுமார் அவர்களும் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தார்கள்.
சமநேரத்தில் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் தாங்கிய மாதிரி வடிவக்கல்லறைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உரித்துடையோர்கள் ஈகைச்சுடர்களை ஏற்றிவைத்தனர். அதேநேரத்தில் துயிலுமில்லப் பாடலும் ஒலிக்க மக்கள் அனைவரும் மழையில் நனைந்தவாறு மாவீரர்களின் நினைவுக் கல்லறைகளுக்கு முன்பாக அந்தப்பாடலோடு ஒன்றித்து நின்றிருந்தனர்.
அடுத்து உறுதியுரையும் அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும் இடம்பெற்றது. மெல்பேர்ண் நகரில் அனைத்துப்பகுதிகளிலும் வாழ்கின்ற பெருந்திரளான தமிழ்மக்கள் வருகைதந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு மழையில் நனைந்தவாறு மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மாதிரிவடிவக்கல்லறைகளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
காலநிலையின் அசாதாரண நிலைமைகளை (இடிமுழக்கம், மழை) கருத்திற்கொண்டு மாலை 7.00 மணியளவில் சமூக அறிவித்தல்கள் அறிவிக்கப்பட்டதையடுத்து தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு முடிவுரை உறுதிமொழியுடன் தமிழீழ மாவீரர்நாள் 2024ம் ஆண்டு நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
வழமைபோன்று இவ்வாண்டும் மாவீரர்கள் நினைவுசுமந்த பதிவுகளை உள்ளடக்கிய காந்தள்மலர் சஞ்சிகை இவ்வாண்டும் வெளியிடப்பட்டது. அத்துடன் 2025ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் நாட்காட்டி உள்ளிட்ட தமிழீழத் தேசிய இலச்சினை பொறிக்கப்பட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன. அவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றதையும் அவதானிக்க முடிந்தது.