யாழ் வீதி திறப்பில் தமிழ் அரசியல்வாதிகளின் தில்லு முல்லு அம்பலம்!
34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக , யாழ்ப்பாணம் பலாலி வீதி – வசவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி நேற்று (01) காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்பட்டது.
மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி இன்று திறக்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு, வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் வீதி மக்கள பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அச்சுவேலி-வசாவிளான் பாதை
34 வருடங்களின் பின்னர் மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்ட அச்சுவேலி-வசாவிளான் பாதையை மக்களோடு சென்று பார்வையிட்டார் எம். ஏ. சுமந்திரன்.
அதோடு ஜனாதிபதி அநுர குமார திசானாயக்கவிடம் தான் கோரிக்கை விடுத்திருந்தாகவும் அதற்கமையவே பாதை திறக்கப்பட்டதாகவும் எம். ஏ. சுமந்திரன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சுமந்திரனது பதிவு தொடர்பில் வைத்தியர் சிவச்சந்திரன் சிவஞானம், இதுபோன்றதொரு சம்பவம் கடந்த 5 வருடத்திற்கு முன்பே மட்டக்களப்பில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு இதய சத்திர சிகிச்சை உபகரணங்கள் வரப்போவதாக வெளியான தகவலை அடுத்து, அதற்கு தாமே காரணம் என பிள்ளையான், சாணக்கியன் , வியாழேந்திரன் ஆகியோர் அறிக்கை விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பின்னர் மட்டக்களப்புக்கு வராமல் அந்த மருத்துவ உபகரணங்கள் களுத்தறைக்கு அனுப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் , திறக்கப்பட்ட வீதிக்கு தான் தான் காரணம் என சுமந்திரன் கூறியுள்ளதை அவர் விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது இதையெல்லாம் மட்டக்களப்பான் செய்து ஐந்து வருடமாகப்போகுது என்றும், நீங்க யாழ்ப்பாணத்தார் இப்பதான் இந்தமாதிரி தொடங்கியே இருக்கிறீர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.