தியாகதீபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது. துங்காபியில் உள்ள பிறிகேட் கவுஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு மாலை ஏழு மணிக்கு ஆரம்பமானது.
ஓவியன் காந்தரூபன், இசைக்கோ தீபவர்ணன் மற்றும் றேமா கருணைவேந்தன் ஆகியோர் நிகழ்வினை தொகுத்து வழங்க, நிகழ்வினை ஆரம்பித்துவைக்கும் முகமாக பொதுச்சுடரை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் தீபன் அன்ரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியக்கொடியை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் கவிவேந்தன் பாலகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் பிறைக்குமரன் பேரின்பராசா அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து, 26-09-1987 அன்று ஈகைச்சாவெய்திய லெப் கேணல் திலீபன், 26-09-2001 அன்றில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மூத்த தளபதி கேணல் சங்கர் (முகிலன்) மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயு (குயிலன்) ஆகியோர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட பீடத்தில், தமிழ் இளையோர் செயற்பாட்டாளர் துளசி செல்வராசா அவர்கள் ஈகைச்சுடரேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தமிழீழ தாயக விடுதலைக்காக, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், உயிர்நீத்த தமிழக உறவுகளையும், போராட்டத்தின்பால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் உறவுகளையும் நினைவில் சுமந்து, மெழுகுதிரி எரிவதைப்போல, சிறுக சிறுக தன்னை எரித்து, மக்களின் விடிவிற்காக ஒளியை பிரகாசித்தவாறு தியாகி திலீபன் அவர்களின் உன்னத தியாகத்தை மனதில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து நிகழ்விற்கு வருகைதந்த அனைவரும் வரிசையாக சென்று திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்கள்.
தியாகதீபம் திலீபன் பற்றிய நினைவுப் பகிர்வை நிதுர்சி செல்வராசா மற்றும் மோகிதா செல்வராசா ஆகியோர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, தியாகதீபம் திலீபன் பற்றி சிறு உரை ஒன்றை தமிழ்நிலா சிவராம் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, 36 ஆண்டுகளுக்கு முன்னர், தியாகதீபம் திலீபன் அவர்கள் உண்ணாநோன்பு இருந்த மேடையில், தாயகக்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களால் மேடையில் வாசிக்கப்பட்ட கவிதையை வாகீஸ் தமிழரசன் அவர்கள் தனது குரலில் வழங்கினார். தியாகதீபம் திலீபன் அவர்கள் பற்றிய பேச்சு ஒன்றை காவியா சேரன் மற்றும் ஓவியா சேரன் ஆகியோர் வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, தியாகதீபம் திலீபன் அவர்கள் பற்றி அபிசயா மதிவதன் அவர்கள் சிறுபேச்சு ஒன்றை வழங்கினார்.
இன்றைய நாளில், காலை பத்து மணி தொடக்கம் மாலை ஆறு மணி வரை இளையோர்கள் ஒன்று கூடி அடையாள உண்ணாநோன்பை மேற்கொண்டிருந்தனர். அதன்போது, அவர்களுக்கான வகுப்புகள், கலந்துரையாடல்கள், வாசிப்புகள், எழுத்துக்கள் என பல அறிவூட்டல் செயற்பாடுகள் நடைபெற்றன. அத்தோடு, அவர்களுக்கு இடையே சதுரங்க போட்டியும் நடைபெற்றன.
அவற்றில் கலந்துகொண்டவர்களுக்கான பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், சதுரங்கப் போட்டியில் சிறப்பாக வெற்றியீட்டியவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
நிறைவாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு உறுதியுரையோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றன. வேலை நாளாக இருந்தபோதும், பெருமளவில் மக்கள் கலந்துகொண்டு தியாகதீபம் திலீபனுக்கு தமது உணர்வுபூர்வமான அஞ்சலியை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.