சுமந்திரனின்(sumanthiran) அழைப்புக்கு அமைவாக தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில்(tna) இணையப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்(vigneswaran), ‘அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும். ஆகவே நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
‘வாரம் ஒரு கேள்வி’ பகுதியில், ‘சுமந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை திரும்ப அழைத்துள்ளார். நீங்களும் தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடுடையவர்கள் அனைவரும் சேர்ந்து தேர்தலில் நிற்பது அவசியம் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் நீங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் சேரும் வாய்ப்புக்கள் உள்ளதா’ என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழ் தேசியத்திற்கு எது முக்கியம்
கட்சிகளோ, கூட்டுக்களோ, சின்னங்களோ தமிழ்த் தேசியத்திற்கு முக்கியமல்ல. தமிழ்த்தேசிய சிந்தனை உடையவர்களே முக்கியம். அண்மையில் தமிழ் மக்கள் சார்பில் தமிழ்த் தேசிய சிந்தனையுடைய அரியநேத்திரனை 7 தேசியக் கட்சிகளும் 80 சிவில் சமூகத்தினரும் சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் ஈடுபடுத்தினார்கள். நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் இதற்கென வெளியில் வந்து பலவிதங்களில் அரியநேத்திரனுக்கு உதவினேன். பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை போன்ற இடங்களில் கூட்டங்களில் பேசினேன். கொழும்பில் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டத்தில் பேசினேன். கட்டமைப்பு பற்றிய பல கேள்விகளுக்குப் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும், வெளிநாட்டு ஊடகங்களிலும் தமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதில் இறுத்தேன்.
ஆனால் அரியநேத்திரனை முன்னிறுத்திய பின்னர் எமது ஏழு கட்சிகளில் அவர் சார்பாக வெளிப்படையாக வெளியே வந்து தமது ஆதரவைத் தெரிவித்தவர்கள் எத்தனை பேர். பலர் இக்காலகட்டத்தில் காணாமல்போய்விட்டார்கள். ஒரு வைத்தியசாலையில் இருந்து நவீன பரிசீலனைகளை மேற்கொள்ள என்னை மற்றொரு வைத்தியசாலைக்கு அனுப்பியபோது இடைப்பட்ட காலத்தில் தேர்தல் நியமன நாளன்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் அரியநேத்திரனுடன் நானும் சிற்பரனும் ஒன்றிணைந்து செயற்பட்டோம்.
சிரமம் பாராமல் நாம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்குக் காரணம் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் வேட்பாளர் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காகவே ஆகும்.
குத்து விளக்கை மையமாக வைத்து செயற்பட்டுவரும் கட்சிகள்
இவ்வாறான ஆதரவையும் அனுசரணையையும் குத்து விளக்கை மையமாக வைத்து செயற்பட்டுவரும் கட்சிகளிடையே நாங்கள் காணவில்லை. அவர்களின் மனோநிலையைப் புரிந்துகொண்டதால் தான் நாங்கள் அவர்களின் கூட்டில் இருந்து வெளியேறி வந்தோம்.
அதேபோல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு அணியின் தலைவர் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணித்து ஒரு சிங்கள வேட்பாளருடன் சேரவேண்டும் என்றே ஒற்றைக் காலில் நின்றார். அவர் தமிழ்த் தேசிய வேட்பாளரை எதிர்த்தார். தமிழ்த் தேசியப் பற்றாளரான சிறிதரன் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்பார்க்கும் இந்நபர் எவ்வாறு எம்மை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சேர அழைக்கலாம். அழைத்தாலும் அவரின் உள் எண்ணம் பற்றி சந்தேகம் எழுகின்றது. தமிழ்த்தேசியத்தை உதட்டளவில் பாவிக்கப் பார்க்கின்றாரோ நானறியேன்.
மூன்றாவதாக பகிஷ்கரிப்பு அணியினர் சிங்கள வேட்பாளரை பகிஷ்கரிப்பதாகக்கூறி கடைசியில் தமிழ்த்தேசிய வேட்பாளரையும் பகிஷ்கரித்தனர்.
இவர்கள் யாவரும் தமிழ்த்தேசியத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட சுயநல காரணங்களே அவர்களை இயக்கி வருவதாக நான் உணர்கின்றேன்.
எம் தமிழ் மக்கள் கூட்டணியைப் பொறுத்தவரையில் முதியவர்கள் நாம் பின்னின்று இளைஞர் யுவதிகளை முன்னிறுத்தித் தமிழ்த்தேசியப் பாதையில் அவர்கள் பயணிக்க வழிவகுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.
திரும்பி வாருங்கள் என்று கூறுவது தமிழ்த் தேசியத்துக்காக அல்ல
சிலர் ஒரு கட்சியின் பெயரைச் சொல்லி ஒற்றுமை ஏற்படுத்த முனையலாம். ஆனால் அவர்களின் சிந்தனை தமிழ்த்தேசியத்தின் பாற்பட்டதா அல்லது சொந்த சுயநலத்தின் பாற்பட்டதா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறானவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள் என்று கூறுவது தமிழ்த் தேசியத்துக்காக அல்ல. சுயநல காரணங்களுக்காகவே ஆகும்.
அரியநேத்திரனாக உருமாற்றம் பெற்றுவிடப்போவதாகக் கற்பனை
அரியநேத்திரனின் சின்னத்தை சிலர் தமக்குப் பெற்றவுடன் தாமும் அரியநேத்திரனாக உருமாற்றம் பெற்றுவிடப்போவதாகக் கற்பனை செய்து கொள்ளக்கூடாது.
உதயசூரியனை சின்னமாக முன்பு எடுத்தவர்கள் தாம் தேர்தலில் வெற்றி பெறப்போவதாகக் கற்பனை செய்தார்கள். ஆனால் எமது தமிழ் வாக்காளர்கள் அந்தச் சின்னத்துக்குப் பதில் குறித்த சின்னத்தில் கேட்டவர்களையே அடையாளம் கண்டு அவர்களைப் புறக்கணித்தார்கள். சின்னம் பெற்றால் சுயநலவாதிகள் பொதுநலவாதிகளாக மற்றும் தமிழ்த்தேசியப் பற்றாளர்களாக உடனே மாறிவிடுவார்கள் என்று நினைப்பது மடமை.
ஆகவே ஒற்றுமை வேண்டும்; நாம் ஒன்றுபட வேண்டும். இளைஞர், யுவதிகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும். தமிழ்த்தேசியத்தை முழுமனதுடன் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதில் எந்தவித முரணான கருத்துக்கும் இடமில்லை.
ஆனால் அதனை வேண்டுபவர்களின் கடந்தகால சிந்தனைகளும் நடத்தைகளும் அதற்கு அனுசரணை தருவதாக அமைந்திருந்தனவா என்பதை எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.
உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார்
சுயநலவாதிகளைக் களைந்து உண்மையாகத் தேசியத்தை விரும்புபவர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களை ஒன்றிணைக்க முன்வரவேண்டும்.
ஆகவே நாங்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சேரும் வாய்ப்புக்கள் இல்லை. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் என்றென்றும் ஒன்று சேராது. வேண்டுமெனில் தமிழ்த் தேசியத்தில் உண்மையில் ஈபட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் பலர் எம் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியில்