தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கிய கணபதிப்பிள்ளை ஞானப்பூங்கோதையிற்கு (வண்ணக்கா), தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நாட்டுப்பற்றாளர் தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கடந்த (11.04.2026) அன்று சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில், 1983 முதல் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை இவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைக் கௌரவிக்கும் விதமாக இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த நம்பிக்கை

விடுதலைப் போராட்டக் காலத்தில் வண்ணக்காவின் இல்லமானது போராளிகளுக்கான புகலிடமாகவும் காயமடைந்தோரைப் பராமரிக்கும் மருத்துவ முகாமமாகவும் முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்கும் இரகசிய மையமாகவும் திகழ்ந்தது.

போராட்டத்தின் இரகசியங்களை மிகுந்த நம்பிக்கையுடன் பாதுகாத்த காரணத்தால் போராளிகளால் வண் (One) எனச் சங்கேத முறையில் அழைக்கப்பட்டதே காலப்போக்கில் வண்ணக்கா என்ற பெயராக நிலைத்தது.

சிங்கள இராணுவம் 

சிங்கள இராணுவம் மற்றும் இந்திய அமைதிப்படையின் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது குடும்பத்துடன் காடுகளில் மறைந்திருந்து போராட்டப் பணிகளைத் துணிச்சலுடன் தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வண்ணக்காவிற்கு நாட்டுப்பற்றாளர் விருது: விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உயரிய கௌரவம் | Ltte Patriot Award For Gnanapoogothai Vannakka

இவரது ஏழு பிள்ளைகளில் மூவர் விடுதலைப் போராட்டத்தில் முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்த நிலையில் இறுதி மூச்சு வரை போராட்ட இலட்சியப் பற்றுடன் வாழ்ந்த இவரது மறைவிற்கு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் வி. ஜெயாத்தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்கள் எமது தேசத்தின் ஆன்மாவில் என்றும் வாழ்வார்கள் என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைய வண்ணக்காவின் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் என அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments