சித்திர ஆசிரியர் ஒருவர் தான் கற்பிக்கும் பாடசாலைக்கு முன்னால் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமஹாராம- புஸ்தோலமுல்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சித்திர ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் 

அத்துடன், விலமுல்ல பகுதியில் உள்ள குறித்த ஆசிரியரின் வீட்டை முற்றுகையிட்டபோது, அங்கிருந்த மேலும் இரு சந்தேகநபர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ‘தெஹிபால’ என்பவரின் சகோதரரான ‘களுமல்லி’ என்பவரின் கீழ், இவர்கள் இந்த போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளதாகத் தங்காலை கோட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரைத் தவிர, ஏனைய இரு சந்தேகநபர்களும் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 5-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பிணையில் இருப்பவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், இப் பாடசாலை ஆசிரியரிடமிருந்து 1,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாடசாலையில் வெசாக் கூடுகள் அமைக்கும் பணிக்காக அவர் சென்றிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேகநபர்களிடமிருந்தும் 102 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், 50 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments