ஈரான் மோதலுக்கு அனைத்துத் தரப்பினரும் உடன்படக்கூடிய ஒரு தீர்வைக் காண முடியும் என்று நம்புவதாகவும், தேவைப்பட்டால் அதற்கு உதவத் தனது நாடு தயாராக இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேசப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த 2015 ஆம் ஆண்டில் தாங்கள் வழங்கியதைப் போன்றே தற்போதும் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் ரஷ்யா முக்கியப் பங்கு வகித்ததோடு, ஈரானிடமிருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதியைத் தனது நாட்டிற்குப் பொறுப்பேற்று எடுத்துக்கொண்டது.
ரஷ்யாவின் முன்மொழிவு
“நாங்கள் இதனை முன்பே செய்துள்ளோம், இப்போதும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று கூறிய புடின், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுக்கொள்வதற்கான ரஷ்யாவின் முன்மொழிவை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

