மனித நாகரிகம் எவ்வளவுக்கு எவ்வளவு உயரங்களை அடைந்திருக்கிறதோ, அதே அளவுக்கு அதன் இருண்ட பக்கங்களிலும் சித்திரவதையின் வரலாறு புதைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

உலகம் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்பே அதிகாரம் தனது மொழியாக வன்முறையையும் சித்திரவதையையும் பயன்படுத்தி வந்திருக்கிறது.

மனித உடலை உடைப்பதன் மூலம் அவனது மனதை அடிமைப்படுத்தலாம் என்ற கொடூரமான நம்பிக்கையே பேரரசுகளின் அரசியலாக இருந்தது.

அதனால்தான் சித்திரவதை என்பது தனிநபர்களின் குற்றமாகவன்றி, பல காலங்களில் அரசுகளும் பேரரசுகளும் உருவாக்கிய அதிகார இயந்திரத்தின் முகமாக விளங்குகிறது.

சர்வதேச ஆதரவு நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று உலகம் சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாளாகும். மனித உடலும் மனித கண்ணியமும் அதிகாரத்தின் சொத்தல்ல என்பதை உலகுக்கு நினைவூட்டும் மனச்சாட்சியின் நாளாக இந்நாள் கருதப்படுகிறது.

சித்திரவதையின் வரலாற்றைத் தேடிச் சென்றால் அது புராணங்களிலும் மதக் கதைகளிலும் கூட பதிந்திருப்பதை காணலாம். கிரேக்க புராணத்தில் தீயை மனிதர்களுக்குக் கொண்டு வந்த புரோமிதியஸ் பாறையில் சங்கிலியால் கட்டப்பட்டு, தினமும் கழுகு வந்து அவனது ஈரலைக் கிழித்துத் தின்றது.

Advertisement

மறுநாள் மீண்டும் அது வளர்ந்தது. மீண்டும் அதே வேதனை. மனித முன்னேற்றத்திற்காக செய்த செயல் முடிவில்லா சித்திரவதையாக மாற்றப்பட்டது. இந்திய இதிகாசங்களிலும் அரசியல் அதிகாரம் எதிரிகளை அவமானப்படுத்தும் தண்டனைகளும் உடல் வேதனைகளும் இடம்பெறுகின்றன.

மதங்களின் வரலாற்றில் பல தீர்க்கதரிசிகளும் சிந்தனையாளர்களும் கொடூரமான தண்டனைகளுக்கு ஆளானதாகச் சொல்லப்படுகிறது. உண்மையைப் பேசுவோரைக் கொடுமைப்படுத்தும் அதிகாரத்தின் இயல்பை இக்கதைகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.t

சித்திரவதையின் வரலாறு

பழைய உலகிலிருந்து நடுக்காலம் வரை சித்திரவதை நீதியின் கருவியாகவே கருதப்பட்டது. ஐரோப்பாவில் விசாரணை என்ற பெயரில் மனிதர்கள் இரும்புச் சாதனங்களில் கட்டப்பட்டனர்; தீயில் சுடப்பட்டனர்.

உடல் உறுப்புகள் இழுக்கப்பட்டன. ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்காக மனிதனின் வேதனையே சாட்சியாக மாற்றப்பட்டது. பின்னர் அறிவொளிக் காலம் மனித உரிமை பற்றிய சிந்தனையை வளர்த்தபோதுதான் சித்திரவதை மனிதநேயத்திற்கு எதிரான குற்றம் என உலகம் மெதுவாக உணரத் தொடங்கியது.

ஆனால் இருபதாம் நூற்றாண்டு உலகுக்கு புதிய முகமுடைய பழைய கொடுமைகளை அறிமுகப்படுத்தியது.

நாசி ஆட்சியின் வதைமுகாம்களில் யூதர்கள், ரோம மக்கள், மாற்றுத்திறனாளிகள், அரசியல் எதிர்ப்பாளர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கானோர் மருத்துவப் பரிசோதனை என்ற பெயரிலும் இனவெறி என்ற பெயரிலும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.

Advertisement

தென் அமெரிக்க இராணுவ ஆட்சிகள் எதிர்ப்பாளர்களை இரகசிய சிறைகளில் மின்சாரம் பாய்ச்சியும் காணாமல் ஆக்கியும் ஆட்சி செய்தன. ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பல சர்வாதிகார ஆட்சிகள் சிறைச்சாலைகளை சித்திரவதைக் கூடங்களாக மாற்றின.

உலகம் ஜனநாயகத்தைப் பேசிக்கொண்டிருந்தபோதும், இரகசிய அறைகளில் மனித உடல்கள் நசுக்கப்பட்டுக்கொண்டே இருந்தன.

இலங்கையில் சித்திரவதையெனும் ஆயுதம்

இந்த உலக வரலாற்றின் ஒரு கொடூரமான அத்தியாயம் இலங்கையிலும் எழுதப்பட்டது. இன்னும் சொன்னால் உலகமெங்கும் நடந்த சித்திரவதையின் நுட்பங்கள் ஈழத் தமிழ் இனத்தை அழிப்பதற்காகப் பிரயோகப்படுத்தப்பட்டன என்பதுதான் கொடூரமான உண்மை.

தமிழர்கள் எதிர்கொண்ட அரசியல் ஒடுக்குமுறையின் மையத்தில் சித்திரவதை எப்போதும் இருந்தது. அது தனிப்பட்ட ரீதியக காவல்துறை  செலத்திய வன்முறையல்ல.

இன அடையாளத்தை உடைக்கும் அரசியல் கருவியாகவே பயன்படுத்தப்பட்டது. இலங்கையில் சித்திரவதையின் அனுபவம் வேறானது. பலருக்கும் பல கதைகள் உள்ளன.

இன்றுவரை பேசப்பாடத சித்திரவதையின் பக்கங்கள் உள்ளன. பல தசாப்தங்களாக அவசரகாலச் சட்டங்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் தமிழர்களின் வாழ்க்கையை இருண்ட அறைகளுக்குள் தள்ளின. கைது செய்யப்பட்டவர்கள் நாட்களும் மாதங்களும் குடும்பத்தாருக்குத் தெரியாமல் வைக்கப்பட்டனர்.

Advertisement

அடித்தல், தலைகீழாகத் தொங்கவிடுதல், மின்சாரம் பாய்ச்சுதல், எரித்தல், பாலியல் வன்முறை, தூக்கமின்றி விசாரணை நடத்துதல், உணவு மறுத்தல் போன்ற எண்ணற்ற கொடுமைகள் முன்னாள் கைதிகளின் சாட்சியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடலில் ஆறிய காயங்களைவிட மனதில் ஆறாத காயங்களே அதிகம் இருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான சித்திரவதைகள்

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் பின்னரும் சித்திரவதையின் வரலாறு முடிவடையவில்லை. போரில் உயிர் தப்பியவர்கள் விசாரணை முகாம்களில் மீண்டும் கொடுமைப்படுத்தப்பட்டதாகப் பலர் சாட்சியமளித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே என்று தெரியாமல் வாழ்கின்றனர்.

உண்மையை அறிய முடியாத அந்த நீண்ட காத்திருப்பும் ஒரு வகையான மனச்சித்திரவதையாகவே தொடர்கிறது. தமிழ்ப் பெண்களின் அனுபவம் இன்னும் வேதனையானது.

உடலை மட்டுமல்ல, அவர்களின் மரியாதையையும் சமூக வாழ்க்கையையும் உடைக்கும் நோக்கில் பாலியல் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டதாகப் பல சர்வதேச மனித உரிமை அறிக்கைகள் பதிவு செய்துள்ளன. போருக்குப் பிறகும் இராணுவமயமாக்கப்பட்ட சூழலில் அச்சம், கண்காணிப்பு, விசாரணை, மிரட்டல் ஆகியவை சாதாரண வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே தொடர்ந்தன.

Advertisement

இன்றும் கைதுகளும் தடுப்புகளும் விசாரணைகளும் கண்காணிப்புகளும் என்று சித்திரவதையின் வடிவங்கள் மாறி நிகழ்த்தப்படுகின்றன. சித்திரவதையின் நோக்கம் உண்மையை அறிவதல்ல, மனிதனின் குரலை மௌனமாக்குவதே ஆகும்.

பயத்தை சமூகத்தின் நினைவில் விதைப்பதே அதன் அரசியல் நோக்கம். அதனால் சித்திரவதை ஒரு மனிதனை மாத்திரமின்றி, ஒரு சமூகத்தின் வரலாற்றையும் தாக்குகிறது.

தாயின் நினைவையும், குழந்தையின் எதிர்காலத்தையும், ஒரு மக்களின் சுதந்திர உணர்வையும் அது காயப்படுத்துகிறது.

சித்திரவதையின் காயங்கள்

இதனால்தான் சித்திரவதைக்கு எதிரான போராட்டம் மனித உரிமைக்கான போராட்டம். சாட்சியங்களைப் பாதுகாப்பதும், உண்மையைப் பதிவுசெய்வதும், நீதியை வலியுறுத்துவதும், பாதிக்கப்பட்டோரின் குரலை உலகம் கேட்பதற்குச் செய்வதும் மனிதகுலத்தின் மிகப் பெரும் பொறுப்பாகும்.

“எந்த அரசும் தனது பாதுகாப்பு என்ற பெயரில் மனித கண்ணியத்தை அழிக்க முடியாது. எந்த அதிகாரமும் வேதனையை நீதியாக மாற்ற முடியாது. எந்த இனமும் தனது நினைவுகளை மறக்க வேண்டிய கட்டாயத்தில் வாழக் கூடாது.” என்பதுவே சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் எமக்குச் சொல்லும் மிகப்பெரிய செய்தி.

உலகின் எல்லா சித்திரவதைக் கூடங்களுக்கும் ஒரு பொதுவான வாசனைதான் இருக்கிறது.  அது மனிதக் குருதியின் வாசனை. ஆனால் அதை இல்லாமல் ஆக்குகிற சக்தி மனித மனச்சாட்சிக்கே இருக்கிறது.

Advertisement

அந்த மனச்சாட்சியை காப்பது இன்றைய நாளின் எமது கரிசனையாக  இருக்க வேண்டும். சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரமின்றி மொழியிலும், நினைவிலும், தலைமுறைகளின் கனவுகளிலும் வாழ்கின்றன என்பதற்கு ஈழம் சாட்சியாக இருக்கிறது.

அந்தக் காயங்கள் மீண்டும் ஒருபோதும் எந்த மக்களுக்கும் ஏற்படாத உலகத்தை உருவாக்குவதே இந்த நாளின் உண்மையான அர்த்தமல்லவா? 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments