
பிரசுரிக்கப்பட்டது19 செப்டெம்பர் 2026
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ரஷ்யாவிலிருந்து எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்க வழிவகுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
டிரம்பின் கையெழுத்தை தொடர்ந்து இம்மசோதா சட்டமாக மாறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராகவும் 100 சதவீதம் வரை வரி விதிப்பதற்கான அதிகாரம் டிரம்பிற்கு கிடைத்துள்ளது.
வியாழக்கிழமை இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்திய மாதங்களில் இவ்விவகாரம் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. “இருதரப்பு உறவுகளுக்கு மட்டுமல்லாமல், சர்வதேச எரிசக்தி சந்தையிலும் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை இந்தியத் தரப்பு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது” என இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்தப் புதிய நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் முதல் 5 நாடுகளை இலக்காகக் கொண்டுள்ளது. இதனால் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடான துருக்கி ஆகியவை மீது புதிய வரிகள் விதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்கா இந்த புதிய அதிகாரங்களை பயன்படுத்துமா இல்லையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், இது அமெரிக்காவிற்கு ஒரு சக்திவாய்ந்த ஆயுதத்தை வழங்கியுள்ளது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு ஐந்தில் ஒரு பங்காகும். இதன்படி, அமெரிக்காவே இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சந்தையாக விளங்குகிறது. இத்தகைய சூழலில், இறக்குமதி வரிகள் மேலும் உயர்த்தப்பட்டால் அது இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
இந்தியா மீதான டிரம்பின் கொள்கை பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடனான உறவு காரணமாக மட்டுமே டிரம்ப் உண்மையிலேயே இந்தியா மீது கோபமாக இருக்கிறாரா அல்லது இந்த விவகாரம் அதையும் தாண்டியதா என்ற கோணத்திலும் ஆராயப்பட்டு வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதற்கு ரஷ்ய எண்ணெய் மட்டுமே காரணம் அல்ல என, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் அமெரிக்காவுக்கான முன்னாள் தூதருமான நிருபமா மேனன் ராவ் கருதுகிறார்.இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியாவில் நாளாந்த உழைப்பை நம்பி இருக்கும் மக்களின் வாழ்க்கை பெரிதாகப் பாதிக்கப்டும் அத்தோடு நாட்டில் வறுமையானவர்களின் தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது?
