நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் தங்களிடம் உள்ளதாகவும் அவை விரைவில் பயன்படுத்தப்படலாம் எனவும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) சிரேஷ்ட தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர், “நீருக்கடியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன. அவை ஒரு விநாடிக்கு 100 மீட்டர் (328 அடி) வேகத்தில் செல்லும். வரவிருக்கும் நாட்களில் அவற்றைப் பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளது” என தெரிவித்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படை திறன்
அத்தோடு, இத்தகைய தொழில்நுட்பம் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளிடமே மட்டுமே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமீப நாட்களில் ஈரான் அதிகாரிகள் பல்வேறு எச்சரிக்கைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டு தங்களின் ஏவுகணை மற்றும் கடற்படை திறன்களை வலியுறுத்தி வருகின்றனர்.
இது அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதலுக்கு எதிராக தங்களுக்கு பல்வேறு பதிலடி வழிகள் உள்ளன என்பதை காட்டும் முயற்சியாக சர்வதேச வட்டாரங்கள் கருதுகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி
இந்த நிலையில், IRGC நீண்ட காலமாக கடற்படை சார்ந்த “அசிமெட்ரிக்” (asymmetric) போர் தந்திரங்களையும் ஆயுதங்களையும் முன்னிறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை IRGC தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில், அதனை அடைவதற்கு அமெரிக்கா கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பின்னணியில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
