இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே இன்று இரவு 21:00 GMT (இலங்கை/இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2:30 மணி) முதல் அதிகாரப்பூர்வமாக 10 நாள் போர்நிறுத்தம் (Ceasefire) நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

லெபனான் இராணுவத் தளபதி ஜோசப் அவுன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் தான் நடத்திய வெற்றிகரமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இந்த அமைதி உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ முன்னிலையில் 34 ஆண்டுகளில் முதல்முறையாக இரு நாடுகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் தொடர்ச்சியாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நிரந்தர அமைதி

ஒரு நிரந்தர அமைதித் தீர்வை எட்டுவதற்காகத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் கூட்டுப் படைத்தளபதிகளின் தலைவர் டான் ரேசின் கெய்ன் ஆகியோரைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்கு ட்ரம்ப் விசேட உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.உலகெங்கிலும் உள்ள ஒன்பது போர்களைத் தீர்த்து வைப்பது எனக்குக் கிடைத்த கௌரவமாகும் எனவும் இது நான் தீர்த்து வைக்கும் பத்தாவது போராக இருக்கும் எனவும் தனது சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லெபனான் எல்லையில் கடந்த சில நாட்களாகக் கடும் மோதல்கள் நிலவி வந்த சூழலில் இந்தத் தற்காலிகப் போர்நிறுத்தம் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய நகர்வாகவும் நிரந்தர அமைதிக்கான ஒரு தொடக்கப்புள்ளியாகவும் சர்வதேச இராஜதந்திரிகளால் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments