அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் 15ஆவது ஆண்டு நிறைவின் அதிதியாக நேற்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்முயற்சியின் ஒரு பகுதி

“கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வட இலங்கையிலுள்ள சமூகங்களை அமெரிக்காவுடன் இணைப்பதில் நீண்டகாலமாக அது வகிக்கும் பங்கினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.

அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் Freedom 250 முன்முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய “Freedom 250 Pavilion” கூடத்தினையும் இதன்போது தூதரகம் திறந்து வைத்தது.

யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடமானது, உள்ளூர் சமூகங்களுடனான நேரடி ஊடாட்டத்திற்கான ஒரு தளமாக Jaffna Social Action Center உடனான பங்காண்மையுடன் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

திறனாய்வுச் சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்களில் திறன்களை கட்டியெழுப்பும் அதேவேளை, அமெரிக்காவைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது.

வேரூன்றிய சிந்தனை

யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்தகவல் கூடமானது, வட இலங்கையில் வளர்ந்துவரும் தலைவர்களை அமெரிக்க அனுபவங்களிலும், கண்ணோட்டங்களிலும் வேரூன்றிய சிந்தனைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது.

ஊடாடும் நிகழ்ச்சித்திட்டங்களையும் சமூக நிகழ்வுகளையும் நடத்துவதற்கான இத்தகவல் கூடத்தின் திறனை Freedom 250 Pavilion விரிவுபடுத்துவதோடு, ஒத்துழைப்பு, கலந்துரையாடல் மற்றும் கற்றலுக்கான ஒரு ஊக்கம் நிறைந்த இடமாக அதன் பங்கினை மேலும் வலுப்படுத்துகிறது.

மேலும், அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்திலமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments