மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்: விரட்டிப் பிடித்த தந்தைமட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டுள்ளார்.

நேற்று (14) இரவு 7.00 மணியளவில், சிறுமியை ஆங்கில வகுப்பிற்காக அவரது தந்தை காரில் அழைத்துச் சென்றுள்ளார். மழை காரணமாக வகுப்பு நடைபெறாததால், நகரில் உள்ள தனது உறவினர் (சிறிய தாயார்) வீட்டில் சிறுமியை விட்டுவிட்டு தந்தை கடைக்குச் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில், சிறுமி வீட்டிற்கு வரவில்லை என உறவினர் தகவலளித்ததும் அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக அங்கு விரைந்துள்ளார்.

தப்பியோடிய இளைஞன்

தந்தை வருவதைக் கண்டதும் அங்கு நின்றிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வேகமாகத் தப்பியோடியது. சந்தேகமடைந்த தந்தை தனது காரில் அதனைத் துரத்திச் சென்று, ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் மடக்கிப் பிடித்தார்.

மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்: விரட்டிப் பிடித்த தந்தை | Drugged And Abducted Girl

இதன்போது முச்சக்கர வண்டியைச் செலுத்தி வந்த இளைஞன் அதனை விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் சிறுமி மயக்கமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்ட தந்தை, அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தார்.

சம்பவம் இடத்திற்கு முச்சக்கர வண்டியை மீட்க வந்த மற்றொரு இளைஞன், தனக்கு பொலிஸ் உயர் அதிகாரிகளைத் தெரியும் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 21 வயதுடைய பிரதான கடத்தல்காரனை காவல்துறையினர் இரவு 11.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணை

கைது செய்யப்பட்ட இருவரும் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள். மட்டக்களப்பு நகரில் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புக்களுக்குச் செல்லும் 15, 16 வயது சிறுமிகளைக் குறிவைத்து, அவர்களைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, போதைப்பொருள் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாக்கும் இளைஞர் குழு ஒன்று செயற்பட்டு வருவதாகப் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments