சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்த முதியவர் கொடூரமாகக் கொலைசுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விடுமுறைக்காக வந்திருந்த 67 வயதுடைய ஒருவர் அவரது வீட்டில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணை

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் வசித்து வந்த வல்லிபுரம் சந்திரசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீண்டகாலமாக சுவிட்சர்லாந்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுமுறைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 14ஆம் திகதிக்குப் பின்னர் அவருடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில், உறவினர்கள் நேற்று மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்பேரில் வீட்டிற்கு சென்ற பொலிஸார், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, உடலில் பல்வேறு வெட்டுக்காயங்களுடன் சந்திரசேகரத்தின் சடலம் காணப்பட்டதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலதிக விசாரணை

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சுவிஸ்லாந்தில் இருந்து யாழ் வந்த முதியவர் கொடூரமாகக் கொலை | Man Came Jaffna From Switzerland Brutally Murdered

எனினும், கமராக்கள் சேதமாக்கப்படுவதற்கு முன்னர் பதிவான காட்சிகளில், முகமூடி அணிந்த இருவர் சமையலறை வழியாக வீட்டிற்குள் நுழைந்திருப்பது பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகநபர்கள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பெருமளவு பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் மோப்ப நாய்களின் தேடுதலை திசைதிருப்பும் நோக்கில் வீட்டின் பல பகுதிகளில் மிளகாய்த் தூள் தூவப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments