போர்ப் பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைனின் F-16 போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர கால வெளியேற்றத்தை பயன்படுத்தி விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ள நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வான்வழி இலக்குகளை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளாக கூறப்படுகிறது.
தீவிர ஆய்வு
எவ்வாறாயினும், குறித்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் நிபுணர்கள் தீவிர ஆய்வை நடத்தி வருவதாக உக்ரைனிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இச்சம்பவத்தால் தரையில் பொதுமக்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ எவ்வித சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் வான்வழித் தாக்குதல்களின் போது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறிக்கவும், முன்னணிப் பகுதியில் உள்ள ரஷ்ய நிலைகள் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கவும் இந்த F-16 விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
